< Back
மாநில செய்திகள்
அதிகமாக கோழிக்கறி சாப்பிட்டதே தந்தை-சிறுமி சாவுக்கு காரணம்- பிரேத பரிசோதனை அறிக்கையில் தகவல்
மதுரை
மாநில செய்திகள்

அதிகமாக கோழிக்கறி சாப்பிட்டதே தந்தை-சிறுமி சாவுக்கு காரணம்- பிரேத பரிசோதனை அறிக்கையில் தகவல்

தினத்தந்தி
|
18 Oct 2023 8:31 PM GMT

அதிகமாக கோழிக்கறி சாப்பிட்டதே தந்தை-சிறுமி சாவுக்கு காரணம் என பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

திருமங்கலம்

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகேயுள்ள பெரியபொக்கம்பட்டியை சேர்ந்தவர் கவுதம் ஆனந்த். இவரது மனைவி பவித்ரா. இவர்களுக்கு மிதுஸ்ரீ(வயது 4) என்ற பெண் குழந்தை இருந்தது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு இரவு கவுதம் ஆனந்த், அவரது மகள் மிதுஸ்ரீ, பவித்ரா ஆகிய 3 பேரும் கோழிக்கறி சாப்பிட்டு வழக்கம் போல் தூங்கினர். ஆனால் நேற்றுமுன்தினம் காலை சிறுமி மிதுஸ்ரீக்கு வயிற்று வலி ஏற்பட்டது. இதைதொடர்ந்து மதுரை அரசு மருத்துவமனைக்கு சிறுமியை அழைத்து சென்றனர். அங்கு சிகிச்சைக்கு சேர்த்த சிறிது நேரத்தில் கவுதம் ஆனந்திற்கும் வயிற்றுவலி ஏற்படவே அவரும் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.

இந்தநிலையில் மிதுஸ்ரீ, கவுதம் ஆனந்த் சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து இறந்தனர். இதுகுறித்து பவித்ரா கொடுத்த புகாரில் சிந்துபட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் அரசு மருத்துவமனையில் தந்தை, மகளின் உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டன. அதில் மிதுஸ்ரீ, கவுதம் ஆனந்த் ஆகியோர் 2 நாட்களுக்கு முன்பு மாலை மற்றும் இரவு ஆகிய இரண்டு வேளைகளில் கோழிக்கறியை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டு உள்ளனர். இதனால் மிதிஸ்ரீ செரிமானம் ஏற்படாமல் பாதிக்கப்பட்டு உயிரிழந்தாள். மகள் இறந்த துக்கம் மற்றும் அதிகமாக கோழிக்கறியை உட்கொண்டு இருந்ததால் மூச்சுதிணறல் ஏற்பட்டு கவுதம் ஆனந்த் உயிரிழந்ததாக அந்த அறிக்கையின் மூலம் தெரியவந்திருப்பதாக போலீசார் தெரிவித்தனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

மேலும் செய்திகள்