தர்மபுரி
ஈஸ்டர் பண்டிகையையொட்டிதேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு
|ஈஸ்டர் பண்டிகையையொட்டி தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
ஈஸ்டர் பண்டிகை
இயேசு கிறிஸ்து புனித வெள்ளி அன்று மரித்து 3-வது நாளான ஞாயிறு அன்று உயிர்த்தெழும் நிகழ்வை ஈஸ்டர் பண்டிகையாக கிறிஸ்தவர்கள் நேற்று கொண்டாடினர். இதையொட்டி தர்மபுரி மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் நேற்று முன்தினம் நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதில் அந்தந்த பகுதியை சேர்ந்த ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
தர்மபுரி பாரதிபுரத்தில் அன்னசாகரம் செல்லும் சாலையில் புதிதாக கட்டப்பட்டு வரும் தூய இருதய ஆண்டவர் பேராலய வளாகத்தில் ஈஸ்டர் பண்டிகை சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. மறை மாவட்ட ஆயர் லாரன்ஸ் பயஸ் தலைமை தாங்கினார். பங்குத்தந்தை அருள்ராஜ் முன்னிலை வகித்தார். பங்குத்தந்தைகள் லிபின்ராஜ், மைக்கேல் உள்ளிட்ட ஏராளமான கிறிஸ்தவர்கள் சிறப்பு பிரார்த்தனையில் கலந்து கொண்டனர். பெண்கள் மெழுகுவர்த்தி ஏந்தி சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
சி.எஸ்.ஐ. சியோன் ஆலயம்
தர்மபுரி சி.எஸ்.ஐ. சியோன் ஆலயத்தில் ஈஸ்டர் பண்டிகை சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. பாதிரியார் பிரான்சிஸ் பெர்னாட்ஷா தலைமையில் நடைபெற்ற இந்த சிறப்பு பிரார்த்தனையில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். இதேபோல் வேப்பமரத்து கொட்டாயில் உள்ள ஏ.ஜி. சர்ச்சில் பாதிரியார் சுந்தர் சிங் தலைமையில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.
இதேபோன்று கோவிலூரில் உள்ள தேவாலயத்தில் பங்குத்தந்தை ஏசுதாஸ் தலைமையில் ஈஸ்டர் பண்டிகை சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. செல்லியப்பட்டியில் பங்குத்தந்தை மதலைமுத்து தலைமையிலும், கடகத்தூரில் பங்குத்தந்தை சவுரியப்பன் தலைமையிலும், பாலக்கோட்டில் பங்குத்தந்தை கென்னடி தலைமையிலும் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதே போல் பூலாப்பட்டியில் பங்குத்தந்தை புஷ்பராஜ் தலைமையிலும், பி.பள்ளிப்பட்டியில் பங்குத்தந்தை தேவசகாயம் தலைமையிலும், பொம்மிடியில் பங்குத்தந்தை ஆரோக்கிய கென்னடி தலைமையிலும், தென்கரைக்கோட்டையில் பங்குத்தந்தை வினோத் தலைமையிலும் ஈஸ்டர் பண்டிகை சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றது.