ராமநாதபுரம்
தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை
|ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் ஈஸ்டர் பண்டிகையையொட்டி நள்ளிரவில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் ஈஸ்டர் பண்டிகையையொட்டி நள்ளிரவில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
ஈஸ்டர் பண்டிகை
ஏசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு மரித்த காலத்தை உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் தவக்காலமாக கடைபிடித்து வருகின்றனர். இதன்படி இந்த ஆண்டு கிறிஸ்தவர்களின் தவக்காலம் கடந்த பிப்ரவரி மாதம் 22-ந் தேதி சாம்பல் புதன் அன்று தொடங்கியது. இந்த 40 நாட்கள் தவக்காலத்தில் கிறிஸ்தவர்கள் ஜெபம், தவம், தானம் செய்து இறைவனின் அருள் பெற வேண்டுகின்றனர். ஏசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு உயிர்நீத்தநாள் புனித வெள்ளி என்றும், உயிர்த்தெழுந்த 3-ம் நாள் தினம் ஈஸ்டர் உயிர்ப்பு ஞாயிறு என்றும் அழைக்கப்படுகிறது. இந்த ஈஸ்டர் பண்டிகைக்கு முதல் வார ஞாயிறு குருத்தோலை ஞாயிறாக கிறிஸ்தவர்களால் கடந்த 2-ந்தேதி கொண்டாடப்பட்டது.
இதனை தொடர்ந்து ஏசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த தினமான ஈஸ்டர் பண்டிகை நேற்று நடைபெற்றது. மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் நேற்று முன்தினம் நள்ளிரவில் சிறப்பு திருப்பலி பிரார்த்தணை நடைபெற்றது. ராமநாதபுரம் ரோமன்சர்ச் பகுதியில் உள்ள புனித ஜெபமாலை அன்னை ஆலயத்தில் நடைபெற்ற சிறப்பு திருப்பலியில் ஏராளமானோர் கலந்துகொண்டு மெழுகுவர்த்தி ஏந்தி சிறப்பு பிரார்த்தனை செய்தனர். ராமநாதபுரம் சி.எஸ்.ஐ. தேவாலயத்தில் சிறப்பு திருப்பலி நிறைவேற்றப்பட்டது.
ராமேசுவரம்
ராமேசுவரம் வேர்க்கோடு புனித சூசையப்பர் ஆலயத்தில் பங்குத்தந்தை தேவசகாயம் தலைமையில் ஏராளமான கிறிஸ்தவர்கள் நேற்று முன்தினம் இரவு 12 மணி அளவில் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி ஆலய வளாகத்தில் அமைதி ஊர்வலமாக வந்தனர். தொடர்ந்து சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. ஓலைக்குடா கிராமத்தில் உள்ள அற்புத குழந்தை ஏசு ஆலயத்தில் பங்குத்தந்தை ஜான்சன் பிரிட்டோ தலைமையில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.
தங்கச்சிமடம் சூசையப்பர் பட்டினம் ஆலயத்தில் பங்குத்தந்தை சுவாமிநாதன் தலைமையில் சிறப்பு பிரார்த்தனை மற்றும் மெழுகுவர்த்தி ஊர்வலம் நடைபெற்றது. பாம்பன் ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் பங்குத்தந்தை சேசு தலைமையில் ஊர்வலம், சிறப்பு பிரார்த்தனை நடந்தது. ஈஸ்டர் பண்டிகையையொட்டி ராமேசுவரம், பாம்பன், தங்கச்சிமடம் உள்ளிட்ட பல ஊர்களிலும் பெரும்பாலான விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. அதேபோல் மாவட்டத்தில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் ஈஸ்டர் பண்டிகையையொட்டி சிறப்பு பிரார்த்தனை நடந்தது.