செங்கல்பட்டு
கிழக்கு கடற்கரை சாலை விரிவாக்க பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் - பொதுமக்கள் கோரிக்கை
|கிழக்கு கடற்கரை சாலை விரிவாக்க பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் இருந்து புதுச்சேரி வரை உள்ள கிழக்கு கடற்கரை சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்ற தேசிய நெடுஞ்சாலை துறை ஆணையம் ரூ.700 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தற்போது அதற்கான பணிகளை தொடங்கி உள்ளது. தற்போது நான்கு வழிச்சாலை விரிவாக்க பணிக்காக 5 ஆயிரத்து 434 ஏக்கர் அரசு புறம்போக்கு மற்றும் பட்டா நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு உள்ளன.
இதையடுத்து தனியாரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பட்டா நிலங்களுக்கு அரசு மூலம் நிர்ணயிக்கப்பட்ட உரிய இழப்பீடு தொகை வழங்கப்பட்டது.
இதில் மாமல்லபுரம், கல்பாக்கம், கடம்பாடி, குன்னத்தூர், பெருமாள்சேரி, மணமை உள்ளிட்ட கிழக்கு கடற்கரை சாலை பகுதிகளில், இழப்பீடு தொகை வழங்கப்பட்டு, கையகப்படுத்தப்பட்ட பட்டா நிலங்களில் உள்ள கட்டிடங்கள் பொக்லைன் எந்திரம் மூலம் இடிக்கப்பட்டு அந்த இடங்கள் சாலை பணிக்காக சமன்படுத்தப்பட்டும், மழை நீர் செல்லும் இடங்களில் சிறிய பாலங்கள் கட்டும் பணிகளும் தொடங்கப்பட்டுள்ளன. குறிப்பாக சாலை விரிவாக்க பணிக்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் சாலையின் இரு புறமும் உள்ள வாகை மரம், வேப்ப மரம், புங்கை மரம், கொன்றை மரம், உள்ளிட்ட வகைகளை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மரங்கள் மரம் அறுக்கும் எந்திரம் மூலம் வெட்டி அகற்றப்பட்டது.
இந்த நிலையில் 4 வழிச்சாலையில், ஒரு பகுதியில் முதல் கட்டமாக இரு வழிச்சாலையில், சாலை விரிவாக்க பணிக்காக மணல் கொட்டப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. மற்றொரு குறுகிய தார் சாலை வழிப்பாதையில்தான் நாள்தோறும் கார், வேன், பஸ் போன்ற வாகனங்கள் ஆயிரக்கணக்கில் சென்று வருகிறது. தற்போது பணிகள் தொடர்ச்சியாக, விறுவிறுப்பாக நடக்காமல் ஆமை வேகத்தில் நடந்து வருவதால் குறுகிய சாலை வழியாக பயணம் செய்யும் வாகனங்கள் ஒன்றோடு, ஒன்று மோதி அடிக்கடி விபத்துகள் ஏற்பட்ட வண்ணம் உள்ளது.
குறிப்பாக வளைவு பகுதிகள் அதிகமாக உள்ளதால் இந்த இடங்களில் அதிக விபத்துகள் நடைபெற்று வருகிறது. இந்த வளைவு பகுதியில் மணல் கொட்டப்படாத பகுதியில் பள்ளமாகவும், சில இடங்களில் தற்போது உள்ள சாலை உயரமாகவும் உள்ளதால் இரவு நேரங்களில் அதிவேகத்தில் வரும் வாகனங்கள் எந்த பக்கம் சாலை உள்ளது, எந்த பக்கம் மணல் கொட்டப்பட்டுள்ளது என்பதை அறியாமல் கவனக்குறைவுடன் வருவதால் வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. பலர் காயமடைந்து கை, கால்களை இழந்து ஊனமாகின்றனர்.
எனவே கிழக்கு கடற்கரை சாலை பணிகளை செய்து வரும் தமிழக அரசின் சாலை மேம்பாட்டு நிறுவனத்தினர் இந்த பணிகளை துரிப்படுத்தி பகலில் நடைபெறும் சாலைப்பணிகளை, இரவு நேரங்களிலும் விரிவுபடுத்தி 4 வழி சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.