மதுரை
திருப்பரங்குன்றம் அருகே தைப்பொங்கலுக்கு தயாராகும் மண்பானைகள்
|திருப்பரங்குன்றம் அருகே தைப்பொங்கலுக்காக மண் பானைகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.
திருப்பரங்குன்றம்
திருப்பரங்குன்றம் அருகே தைப்பொங்கலுக்காக மண் பானைகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.
தமிழர் திருநாள்
தமிழர் திருநாளான தைப்பொங்கலுக்கு இன்னும் 4 நாட்கள் உள்ளன. பொங்கல் என்றால் கரும்பு, பச்சரிசி, வெல்லம், ஏலக்காய், முந்திரி பருப்பு, கிஸ்மஸ்பழம், சுக்கு, நெய், டால்டா ஆகிய பொருட்கள் நினைவுக்கு வரும். அதேசமயம் பெரும்பாலானோருக்கு பொங்கலிட கூடிய "மண்பானை" நினைவுக்கு வருவதில்லை. அதற்கு காரணம் நாகரிகமான கணினி யுகத்தில் பித்தளை மற்றும் சில்வர் பானைகளில் பொங்கலிடும் பழக்கத்திற்கு மாறிவிட்டனர். அதேபோல் மண் அடுப்புக்கு பதிலாக கியாஸ் சிலிண்டரில்தான் பொங்கல் வைக்கின்றனர். மேலும், பித்தளை, சில்வர் பானைகளில் வைக்ககூடிய பொங்கலில் ருசி, மணம் இருப்பதில்லை என்று தெரிந்தும் பெரும்பாலானோர் மண்பானையை விரும்பாத நிலை இருந்து வந்தது. நாளடைவில் மண்பானையின் மகத்துவம் உடல் ஆரோக்கியம் குறித்து விழிப்புணர்வு ஏற்பட்டது. இந்த நிலையில் பாரம்பரியத்தை போற்றும் விதமாக மண்பானையில் பொங்கலிடுவதை பின்பற்றுவதில் மக்கள் தற்போது ஆர்வம் காட்டி வருகின்றனர்.
மண்பானை தயாராகிறது
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வலையங்குளம் ஊராட்சியில் தைப்பொங்கலுக்காக மண்பானை தயாரிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. அரை கிலோ, முக்கால் கிலோ, ஒரு கிலோ, 2 கிலோ என்று பொங்கல் வைப்பதற்கு ஏற்ப 5 விதமான மண் பானைகள் தயாரிக்கப்படுகிறது. மண்பானை தயாரிப்பாளரான வலையங்குளத்தை சேர்ந்த அழகுமலை கூறும்போது, உடல் ஆரோக்கியம், ருசிக்கு மண்பானையில் பொங்கலிடுவதுதான் சிறந்தது.
நமது முன்னோர்கள் மண்பானையில் பொங்கலிட்டு வந்தனர். அதனால் மண்பானை தனி முத்திரை பதித்தது. குல தொழிலாளிகளின் வாழ்வாதாரம் சிறப்பாக இருந்து வந்தது. கடந்த 45 ஆண்டு காலமாக குல தொழிலாளாக மண் பானை செய்து பிழைப்பு நடத்திவந்தோம். இந்நிலையில் சில்வர், பித்தளை பானைகளால் மண்பானைக்கு சரிவு ஏற்பட்டது. அதில் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறி ஆனதோடு பாரம்பரிய தொழில் நசுங்கிவிடுமோ? என்ற அச்சம் நிலவியது. ஒரு சில ஆண்டுகள் மண்பானை தொழில் முடக்கத்தால் பெரும் அவதிகுள்ளாகி வந்தோம்.
கோயமுத்தூருக்கு ஏற்றுமதி
ஆனால் தற்போது மண் பானைக்கு புத்துயிர் உருவாகி உள்ளது. ஆகவே பொது மக்கள் விரும்பி தங்களது இடத்திற்கே வந்து பானையை வாங்கி செல்கிறார்கள். அதை பார்க்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது. வலையங்குளம் மண்பானையை கோவை மக்கள் விரும்பி வாங்குகின்றனர். அதனால் கோவைக்கு அதிகமாக ஏற்றுமதி செய்யப்படுகிறது. அதற்கு அடுத்தபடியாக திருப்பூர், ஈரோடுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது என்றார்.
தை திருநாளில் புதுப்பானையில் பொங்கல் வைக்க வேண்டும் என்பதற்காக புதுமண தம்பதிகளுக்கு பொங்கல் சீர்வரிசையான விலை உயர்ந்த பித்தளை பானைகள் வழங்கப்படுகிறது. அதோடு பொங்கல் வைப்பதற்கு என்று ஒருமண்பானையும் கொடுத்தால் பாரம்பரிய பழக்கவழக்கங்களுக்கு நாம் செலுத்தும் மரியாதையாக இருக்கும்.
பானை விலை உயர்வு
மண்பானை உற்பத்தி செய்துவரும் வலையங்குளத்தை சேர்ந்த பெருமாள் கூறும்போது, மழை பெய்து கண்மாய்கள் நிரம்பி உள்ளது. அது விவசாயிகளுக்கும், விவசாயத்திற்கும் கைகொடுப்பதிலும், குடிநீருக்கு ஆதாரமாக இருப்பதையும் எண்ணி மகிழ்ச்சியாக உள்ளது. அதேசமயம் மண்பானை செய்யக்கூடிய பகுதிகளில் களிமண் கிடைக்கவில்லை.
சேந்தமங்கலம், பாலமேடு பகுதிகளில் அனுமதி பெற்று மண் எடுக்கப்பட்டு வருகிறது. அதில் ஒரு லோடு ரூ.15 ஆயிரம் கொடுத்து விலைக்கு மண்வாங்கி பொங்கல் பானை செய்து வருகிறோம்.
எனவே கடந்த காலங்களை விட நடப்பு ஆண்டில் பொங்கல் பானை விலை உயரும். அதாவதுரூ.80-க்கு விற்கப்பட்ட பானை ரூ.150-க்கு மேல் விற்க வேண்டிய நிலை உள்ளது என்றார்.