< Back
மாநில செய்திகள்
கொப்பரை கொள்முதல் முன்கூட்டியே நிறைவு
கோயம்புத்தூர்
மாநில செய்திகள்

கொப்பரை கொள்முதல் முன்கூட்டியே நிறைவு

தினத்தந்தி
|
3 Aug 2023 1:30 AM IST

பொள்ளாச்சி, ஆனைமலையில் கொப்பரை கொள்முதல் முன்கூட்டியே நிறைவு பெற்றுள்ளது. இதனால் நீட்டிப்பு செய்ய அரசுக்கு அதிகாரிகள் கருத்துரு அனுப்பி உள்ளனர்.

பொள்ளாச்சி

பொள்ளாச்சி, ஆனைமலையில் கொப்பரை கொள்முதல் முன்கூட்டியே நிறைவு பெற்றுள்ளது. இதனால் நீட்டிப்பு செய்ய அரசுக்கு அதிகாரிகள் கருத்துரு அனுப்பி உள்ளனர்.

கொப்பரை கொள்முதல்

பொள்ளாச்சி, ஆனைமலை பகுதியில் அதிகளவில் தென்னை சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. தற்போது தேங்காய் விளைச்சல் அதிகரித்து உள்ளது. ஆனால் ஏற்றுமதி பாதிப்பு, வரத்து அதிகரிப்பு போன்ற காரணங்களால் விலை குறைந்து உள்ளது. இதை ஈடு செய்ய கொப்பரை கொள்முதலை அதிகரிக்க அரசை விவசாயிகள் வலியுறுத்தினர்.

இதைத்தொடர்ந்து பொள்ளாச்சி உள்பட மாவட்டத்தில் 10 ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் கொப்பரை கொள்முதல் மையங்கள் தொடங்கப்பட்டன. குறைந்தபட்ச ஆதார விலையாக கிலோவுக்கு அரவை கொப்பரை ரூ.108.60, பந்து கொப்பரை ரூ.117.50 என அரசு நிர்ணயம் செய்தது.

முன்கூட்டியே நிறைவு

இதற்கிடையில் கொள்முதல் தேதி அடுத்த மாதம்(செப்டம்பர்) வரை இருக்கும் நிலையில், முன்கூட்டியே கொள்முதல் நிறைவடைந்து உள்ளது.

இதுகுறித்து ஒழுங்குமுறை விற்பனை கூட அதிகாரிகள் கூறியதாவது:-

விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று கடந்த ஏப்ரல் மாதம் 1-ந் தேதி பொள்ளாச்சி, ஆனைமலை, நெகமம், கிணத்துக்கடவு, செஞ்சேரி, சூலூர், தொண்டாமுத்தூர், கோவை, அன்னூர், காரமடை ஆகிய ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் கொப்பரை கொள்முதல் தொடங்கியது. அடுத்த மாதம் 30-ந் தேதிக்குள் 22 ஆயிரம் மெட்ரிக் டன் கொப்பரை கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது.

அரசுக்கு கருத்துரு

ஆனால் கொப்பரை வரத்து அதிகமாக இருந்தது. இதனால் கொள்முதல் தேதி முடிவடையாத நிலையில் முன்கூட்டியே கொள்முதல் முடிந்து உள்ளது. 16 ஆயிரத்து 698 விவசாயிகளிடம் இருந்து 22 ஆயிரம் மெட்ரிக் டன் கொப்பரை கொள்முதல் செய்யப்பட்டு உள்ளது. இதன் மதிப்பு ரூ.238 கோடியே 92 லட்சமாகும்.

ஆனால் கூடுதலாக கொள்முதல் செய்ய விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர். இதை ஏற்று கூடுதலாக 10 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்முதல் செய்ய அனுமதி கேட்டு அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசும் மத்திய அரசை வலியுறுத்தி உள்ளது. அனுமதி கிடைத்ததும் மீண்டும் கொப்பரை கொள்முதல் தொடங்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்