தூத்துக்குடி
ஏரல் சேர்மன் அருணாசலசாமி கோவில் ஆடி அமாவாசை திருவிழா கொடியேற்றம்
|ஏரல் சேர்மன் அருணாசலசாமி கோவில் ஆடி அமாவாசை திருவிழா கொடியேற்றம் நடந்தது.
ஏரல்:
ஏரல் ேசர்மன் அருணாசலசாமி கோவில் ஆடி அமாவாசை திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
ஆடி அமாவாசை திருவிழா
ஏரல் சேர்மன் அருணாசலசாமி கோவில் ஆடி அமாவாசை திருவிழாவை முன்னிட்டு நேற்று காலை 6 மணிக்கு கொடியேற்ற நிகழ்ச்சி நடந்தது. கோவில் வளாகத்தில் திருவிழா கொடியேற்றி வைத்து விழாவை கோவில் பரம்பரை அக்தார் அ.ரா.க.அ. கருத்தப்பாண்டிய நாடார் தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து கொடிமரத்துக்கும், சுவாமிக்கும்
சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இரவு கேடய சப்பரத்தில் அருணாசலசாமி கோவில் வளாகத்தில் வலம் வந்தார். முன்னதாக ஞாயிற்றுக்கிழமை சங்முக தீர்த்தம் கோவிலுக்கு கொண்டுவரப்பட்டது.
சேர்ம திருக்கோலம்
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆடி அமாவாசை திருவிழா வருகிற 16-ந் தேதி நடக்கிறது. அன்று பகல் 1.30 மணிக்கு சுவாமி உருகுபல்லக்கில் கற்பூர விலாசம் வரும் காட்சியும், சிறப்பு அபிஷேகங்களும் நடைபெறும். மாலை 5 மணிக்கு இலாமிச்சைவேர் சப்பரத்தில் சேர்ம திருக்கோலம், இரவு 11 மணிக்கு கற்பக போன் சப்பரத்தில் எழுந்தருளல் நடைபெறுகிறது. வருகிற 17-ந் தேதி காலை 4 மணிக்கு வெள்ளை சாத்தி தரிசனம், காலை 9 மணிக்கு பச்சை சாத்தி அபிஷேகம், பகல் 1 மணிக்கு பச்சை சாத்தி தரிசனம், மாலை 6 மணிக்கு ஏரல் சவுக்கை முத்தாரம்மன் கோவில் பந்தலில் தாகசாந்தி, இரவு 10.30 மணிக்கு கோவில் மூலஸ்தானம் வந்து சேரும் ஆனந்த காட்சி, திருக்கற்பூர தீப தரிசனம் நடைபெறுகிறது.
தீர்த்தவாரி
வருகிற 18-ந் தேதி காலை 8 மணிக்கு தீர்த்தவாரியை முன்னிட்டு தாமிபரணி ஆற்றில் சகல நோய் தீரும் திருத்துறையில் நீராடல், பகல்12.30 மணிக்கு அன்னதானம், மாலை 3 மணிக்கு ஆலிலைச் சயன அலங்காரம், மாலை 6 மணிக்கு ஊஞ்சல் சேவை, இரவு 9 மணிக்கு திருவருள் புரியும் மங்கல தரிசனம் நடைபெறுகிறது. திருவிழா அனைத்து ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அத்தார் அ.ரா.க.அ.கருத்தப்பாண்டிய நாடார் செய்துள்ளார்.