நாமக்கல்
நாமக்கல்லில் கூடுதல் கட்டணம் வசூலித்த இ-சேவை மையம் மீது நடவடிக்கை
|நாமக்கல்லில் அரசு நிர்ணயித்த சேவை கட்டணத்தை காட்டிலும் கூடுதலாக கட்டணம் வசூலித்த இ-சேவை மையத்தின் பயனாளர் குறியீடு கலெக்டர் ஸ்ரேயா சிங் உத்தரவின் பேரில் முடக்கம் செய்யப்பட்டுள்ளது.
நாமக்கல்லில் அரசு நிர்ணயித்த சேவை கட்டணத்தை காட்டிலும் கூடுதலாக கட்டணம் வசூலித்த இ-சேவை மையத்தின் பயனாளர் குறியீடு கலெக்டர் ஸ்ரேயா சிங் உத்தரவின் பேரில் முடக்கம் செய்யப்பட்டுள்ளது.
இ-சேவை மையம் மீது நடவடிக்கை
நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள தனியார் பொது இ-சேவை மையத்தில் அரசு நிர்ணயித்த சேவை கட்டணத்தை விட அதிக கட்டணம் வசூலிப்பதாக மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் வந்தது. இதையடுத்து அந்த இ-சேவை மையத்தில் அதிகாரிகள் திடீர் ஆய்வு செய்தனர். அப்போது முதியோர் ஓய்வூதிய திட்டம் சார்ந்த விண்ணப்பங்கள் மற்றும் பட்டா மாறுதல் தொடர்பான விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்வதற்கு அரசு நிர்ணயித்த கட்டணத்தை காட்டிலும் கூடுதலாக அதிக கட்டணம் வசூல் செய்தது உறுதி செய்யப்பட்டது. இதனால் கூடுதல் கட்டணம் வசூலித்த தனியார் இ-சேவை மையத்தின் பயனாளர் குறியீடு முடக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
இதுதொடர்பாக கலெக்டர் ஸ்ரேயா சிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- நாமக்கல் மாவட்டத்தில் செயல்படும் பொது இ-சேவை மையங்களில் அரசினால் நிர்ணயிக்கப்பட்ட சேவை கட்டணத்தை விட அதிக கட்டணம் வசூலிப்படுவது கண்டறியப்பட்டாலோ அல்லது புகார்கள் வரப்பெற்றாலோ சம்பந்தப்பட்ட இ-சேவை மையத்தின் அங்கீகாரம் முற்றிலுமாக ரத்து செய்யப்படும்.
கட்டணம் நிர்ணயம்
மேலும், நாமக்கல் மாவட்டத்தில் இயங்கி வரும் தனியார் கணினி மையங்கள், பொது இ-சேவை மையம் செயல்படுத்துவதற்கு முறையான அரசு அனுமதி பெறாமல் முற்றிலும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக உருவாக்கப்பட்ட சிட்டிசன் லாக்கின் முறையினை பயன்படுத்தி, வருவாய் துறை சார்ந்த சான்றுகள் மற்றும் முதியோர் உதவித்தொகை சம்பந்தமான விண்ணப்பங்களை பொதுமக்களிடமிருந்து அதிக கட்டணம் பெற்றுக்கொண்டு பதிவேற்றம் செய்தாலோ அல்லது இதுதொடர்பாக விளம்பர பலகைகள் வைத்தாலோ நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
பொது இ-சேவை மையங்களில் வருவாய்த்துறையின் மூலம் வழங்கப்படும் சான்றிதழ்கள் தொடர்பான விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்வதற்கு மனு ஒன்றிற்கு ரூ.60-ம், ஓய்வூதிய திட்டங்கள் தொடர்பான விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்வதற்கு மனு ஒன்றிற்கு ரூ.10-ம், இணைய வழி பட்டா மாறுதல்கள் தொடர்பான விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்வதற்கு மனு ஒன்றிற்கு ரூ.60-ம் அரசினால் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
புகார் தெரிவிக்கலாம்
எனவே பொதுமக்கள் இடைதரகர்களை தவிர்த்து, அருகில் உள்ள தாசில்தார் மற்றும் நகராட்சி அலுவலக இ-சேவை மையங்கள், கூட்டுறவு சங்க இ-சேவை மையங்கள், மகளிர் திட்டங்களின் மூலம் கிராம ஊராட்சிகளில் செயல்படும் இ-சேவை மையங்கள் மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் இ-சேவை மையங்களை மட்டுமே அணுக வேண்டும். அரசு நிர்ணயித்த கட்டணத்தை தவிர அதிக கட்டணம் பெறும் இ-சேவை மையங்கள் பற்றிய புகார்களுக்கு tnesevaihelpdesk@tn.gov.in என்கிற மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது கட்டணமில்லாத தொலைபேசி எண் 1100 மற்றும் 18004251997 மூலமாகவோ புகார்களை தெரிவிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.