< Back
மாநில செய்திகள்
நீலகிரியில் உள்ளூர் வாகனங்களுக்கு இ-பாஸ் கட்டாயம் இல்லை

கோப்புப்படம் 

மாநில செய்திகள்

நீலகிரியில் உள்ளூர் வாகனங்களுக்கு இ-பாஸ் கட்டாயம் இல்லை

தினத்தந்தி
|
5 May 2024 4:38 AM IST

7-ந் தேதி முதல் நீலகிரி மாவட்டத்திற்கு வரும் அனைத்து வாகனங்களும் இ-பாஸ் பெற்று வர வேண்டும்.

ஊட்டி,

கோடைகாலத்தில் நீலகிரி மாவட்டம் ஊட்டி, திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் போன்ற மலைப்பிரதேசங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரிக்கிறது. இதனால் அங்குள்ள சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதை தவிர்க்க கொரோனா காலத்தில் அமல்படுத்தியதுபோன்று இ-பாஸ் நடைமுறையை அமல்படுத்த வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு விரைவில் வெளியிட இருக்கிறது. இந்த நிலையில் நீலகிரி மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட உள்ளூர் வாகனங்களுக்கு இ-பாஸ் கட்டாயம் இல்லை என்று வட்டார போக்குவரத்து அதிகாரி தியாகராஜன் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-

சென்னை ஐகோர்ட்டு உத்தரவின்படி வருகிற 7-ந் தேதி முதல் நீலகிரி மாவட்டத்திற்கு வரும் அனைத்து வாகனங்களும் இ-பாஸ் பெற்று வர வேண்டும். நீலகிரி மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட உள்ளூர் வாகனங்களுக்கு இ-பாஸ் தேவையில்லை. வெளிமாவட்டங்களில் இருந்து வாகனங்களை வாங்கி நீலகிரி மாவட்டத்தில் உரிமை மாற்றம் செய்திருந்தால் வாகனத்தின் அசல் பதிவுச்சான்று, காப்புச்சான்று மற்றும் நடப்பிலுள்ள புகைச்சான்று ஆகியவற்றுடன் ஊட்டி வட்டார போக்குவரத்து அலுவலகத்தை அணுகினால் ஆவணங்களை சரிபார்த்து இ-பாஸ் வழங்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்