ஊட்டி, கொடைக்கானல் செல்ல இ-பாஸ்: நெறிமுறைகள் இன்று மாலை வெளியாகிறது?
|கொடைக்கானல் மற்றும் ஊட்டிக்கு எத்தனை சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்படும் என்பது குறித்த வழிகாட்டு நெறிமுறைகள் இன்று மாலை வெளியாகிறது
சென்னை,
கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. பள்ளிகளுக்கு கோடை விடுமுறையும் விடப்பட்டுள்ளது. இதனால் ஊட்டி மற்றும் கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்வோரின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்துக்கொண்டு செல்கிறது. ஏராளமானோர் வந்து குவிந்து விடுவதால், சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதுகிறது. மேலும் அதிகரிக்கும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது.இதனை கட்டுப்படுத்துவது பெரிய சவாலாக இருக்கிறது.
இந்தநிலையில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, வனம் தொடர்பான வழக்குகள் சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரதசக்கரவர்த்தி ஆகியோர் கொண்ட சிறப்பு டிவிசன் பெஞ்ச் முன்பு கடந்த 29 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், "கொரோனா காலகட்டத்தில் பின்பற்றப்பட்டது போல கோடை காலத்திலும் ஊட்டி, கொடைக்கானலுக்கு செல்லும் வாகனங்களுக்கு வரும் மே 7-ந் தேதி முதல் ஜூன் 30-ந் தேதி வரை இ-பாஸ் நடைமுறையை அமல்படுத்த வேண்டும்.
இ-பாஸ் வழங்கும் முன்பாக எந்த மாதிரியான வாகனங்களில் எத்தனை பேர் வருகை தருகின்றனர்? அவர்கள் எத்தனை நாட்கள் தங்கப்போகின்றனர்? எங்கு தங்கவுள்ளனர்? போன்ற விவரங்களையும் பெற்றுக்கொண்டு, சுற்றுலா தலங்களில் பின்பற்ற வேண்டிய கட்டுப்பாடுகளையும் தெரிவிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதன்படி, கொடைக்கானல் மற்றும் ஊட்டிக்கு செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் இன்று மாலை வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இ-பாஸ் நடைமுறைக்காக தமிழ்நாடு அரசின் தகவல் தொழில்நுட்பத்துறை சார்பில் பிரத்யேக இணையதளம் ஒன்றும் துவங்கப்பட இருப்பதாகவும், எத்தனை வாகனங்களுக்கு அனுமதி, உள்ளூர் வாகனங்களுக்கான நடைமுறைகள் என்ன? போன்ற விவரங்கள் வழிகாட்டு நெறிமுறையில் இடம்பெறும் என்றும் கூறப்படுகிறது.