< Back
மாநில செய்திகள்
12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத இருக்கும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மின்னஞ்சல் முகவரி கட்டாயம் - பள்ளிக்கல்வித்துறை
மாநில செய்திகள்

12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத இருக்கும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மின்னஞ்சல் முகவரி கட்டாயம் - பள்ளிக்கல்வித்துறை

தினத்தந்தி
|
6 Jan 2023 8:16 PM IST

12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள அரசு பள்ளி மாணவர்கள் மின்னஞ்சல் முகவரியை உருவாக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

சென்னை,

பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள அரசு பள்ளி மாணவர்கள் மின்னஞ்சல் முகவரியை உருவாக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் முதல் வாரத்தில் தொடங்க உள்ளது. ஏறக்குறைய 8 லட்சம் மாணவர்கள் இந்த பொதுத்தேர்வு எழுத உள்ளனர். இந்த நிலையில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்திட்ட இயக்குனர் ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளார். இது அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

அதில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு பிறகு கல்லூரி சேர்க்கை, நான் முதல்வன் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்காக மின்னஞ்சல் முகவரி தேவைப்படுகிறது. எனவே அரசு பள்ளிகளில் தற்போது படித்துக் கொண்டிருக்கும் பொதுத்தேர்வு எழுத உள்ள அனைத்து 12-ம் வகுப்பு மாணவர்களுக்கும் மின்னஞ்சல் முகவரியை உருவாக்க வேண்டும் என்று அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

வருகிற 9-ந்தேதி தொடங்கி 12-ம் தேதிக்குள் இந்த பணிகளை முடிக்க வேண்டும் என்றும் அந்தந்த பள்ளி தலைமையாசிரியர் துணையோடு இந்த மின்னஞ்சல் முகவரி உருவாக்க வேண்டும் என்றும் மேலும் இந்த மின்னஞ்சலை எவ்வாறு கையாள வேண்டும் என்பது குறித்து மாணவர்களுக்கு உரிய பயிற்சிகளை அளிக்க வேண்டும் என்றும் அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலமாக உயர்கல்வி சேர்கை தொடர்பான பல்வேறு கடிதங்கள், அறிவுறுத்தல்கள் எல்லாம் மாணவர்களுடைய மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்பட இருக்கின்றன.

மேலும் செய்திகள்