கள்ளக்குறிச்சி
அரசு அலுவலர்களுக்கு மின் ஆளுமை பயிற்சி வகுப்பு
|கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அரசு அலுவலர்களுக்கான மின் ஆளுமை பயிற்சி வகுப்பை கலெக்டர் ஸ்ரீதர் தொடங்கி வைத்தார்
கள்ளக்குறிச்சி
பயிற்சி வகுப்பு
கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் ஊரக வளர்ச்சித்துறை, பேரூராட்சி, வருவாய்த்துறை மற்றும் கலெக்டர் அலுவலகங்களில் மின் ஆளுமை அலுவலக நடைமுறையினை செயல்படுத்துவது தொடர்பான பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இதை கலெக்டர் ஸ்ரீதர் தொடங்கி வைத்து பேசியதாவது:-
காகித பயன்பாடு குறையும்
தமிழக அரசு அனைத்து அரசு அலுவலகங்களிலும் அலுவலக நடைமுறைகள் அனைத்தும் மின் ஆளுமையின்கீழ் கொண்டு வரப்படும் என்று அறிவித்திருந்தது. இதன் தொடக்கமாக ஊரக வளர்ச்சித்துறை, பேரூராட்சி, வருவாய்த்துறை மற்றும் மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் மின் ஆளுமை அலுவலக நடைமுறையினை செயல்படுத்துவது தொடர்பான பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது.
இப்பயிற்சி வகுப்புகளில் பங்கேற்றுள்ள அரசு அலுவலர்கள், பணியாளர்கள் மின் ஆளுமை குறித்த பயிற்சியினை நன்கு தெரிந்து கொள்ள வேண்டும். வரும் காலங்களில் அரசின் அனைத்து கோப்புகளும், தபால் பரிமாற்றங்கள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சான்றுகள் உள்ளிட்டவைகள் மின் ஆளுமை வாயிலாக வழங்கப்படவுள்ளது. இம்முறையினால் கால விரையம் மற்றும் காகித பயன்பாடு குறைக்கப்படுகிறது.
கோப்புகள் பாதுகாப்பு
அரசின் அனைத்து கோப்புகளும் பாதுகாக்கப்பட்டு தேவைப்படும்போது எளிதில் பயன்படுத்துவதற்கு பேருதவியாக அமையும். எனவே இப்பயிற்சியில் பங்கேற்றுள்ள அரசு அலுவலர்கள் மின் ஆளுமையை பயன்படுத்துவது தொடர்பான சந்தேகங்கள் இருப்பின் பயிற்சியாளரிடம் கேட்டு தெரிந்துகொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதில் கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) சுரேஷ், கூடுதல் நேர்முக உதவியாளர்(நிலம்) ஹஜிதா பேகம், கள்ளக்குறிச்சி கோட்டாட்சியர் பவித்ரா, மாவட்ட வழங்கல் அலுவலர் ஷெர்லி ஏஞ்சலா, உதவி ஆணையர்(கலால்) ராஜவேல், கலெக்டரின் நேர்முக உதவியாளர்(கணக்குகள்) மலர்விழி, கம்ப்யூட்டர் ஆட்டோமேஷன் பயிற்றுநர் விக்னேஷ்குமார் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.