மயிலாடுதுறை
மயிலாடுதுறை, சீர்காழி நகரங்களை கண்காணிக்க 'இ-பீட் சிஸ்டம்'
|மயிலாடுதுறை, சீர்காழி நகரங்களை கண்காணிப்பதற்கான இ-பீட் சிஸ்டத்தை 6 ரோந்து வாகனங்களை வழங்கி போலீஸ் சூப்பிரண்டு நிஷா தொடங்கி வைத்தார்.
மயிலாடுதுறை, சீர்காழி நகரங்களை கண்காணிப்பதற்கான இ-பீட் சிஸ்டத்தை 6 ரோந்து வாகனங்களை வழங்கி போலீஸ் சூப்பிரண்டு நிஷா தொடங்கி வைத்தார்.
மயிலாடுதுறை மாவட்டம்
மயிலாடுதுறை மாவட்டம் 2020-ம் ஆண்டு தமிழகத்தின் 38-வது மாவட்டமாக உதயமானது. மயிலாடுதுறை, சீர்காழி ஆகிய 2 போலீஸ் சரக உப கோட்டங்கள் உள்ள நிலையில் நிர்வாக வசதிக்காக மயிலாடுதுறை வருவாய் கோட்டமானது மயிலாடுதுறை, சீர்காழி ஆகிய 2 வருவாய் கோட்டங்களாக பிரிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. காவல்துறையின் அனைத்து பிரிவுகளும் மயிலாடுதுறை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வரப்பட்டு செயல்பட தொடங்கி உள்ளது.இந்த நிலையில் மயிலாடுதுறை, சீர்காழி ஆகிய நகரங்களை 24 மணிநேரமும் தொடர்ந்து தீவிரமாக கண்காணிக்கும் வகையில் 'இ-பீட் சிஸ்டத்தை' தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி மயிலாடுதுறையில் நேற்று நடந்தது. இதில் போலீசாருக்கு 6 காவல் ரோந்து வாகனங்களை வழங்கி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா, 'இ-பீட் சிஸ்டத்தை' தொடங்கி வைத்தார்.
உடனுக்குடன் தகவல்
அப்போது அவர் வாகனங்களில் ரோந்து பணியையும் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். ரோந்து செல்லும் போலீசாரிடம், குற்ற சம்பவங்கள் நடந்தால் உடனுக்குடன் போலீஸ் நிலையங்களுக்கு தகவல் அளிக்குமாறும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா அறிவுறுத்தினார்.அப்போது மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தங்கவேல் மற்றும் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் உடன் இருந்தனர்.
குறைதீர்க்கும் கூட்டம்
மயிலாடுதுறை மாவட்டத்தில் பொதுமக்கள் தங்கள் பிரச்சினைகள் குறித்து அளித்த புகார்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா தலைமையில் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடந்தது. இதில் மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த 60-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு போலீஸ் சூப்பிரண்டிடம் பல்வேறு கோரிக்கைகள் குறித்து தெரிவித்தனர்.இதில் அளிக்கப்பட்ட புகார்கள் குறித்து சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையங்களில் 3 நாட்களில் உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கூறினார்.