< Back
மாநில செய்திகள்
சாலையில் குப்பைகளைக் கொட்டி ஊராட்சி நிர்வாகத்தினர் அட்டகாசம்
திருப்பூர்
மாநில செய்திகள்

சாலையில் குப்பைகளைக் கொட்டி ஊராட்சி நிர்வாகத்தினர் அட்டகாசம்

தினத்தந்தி
|
6 May 2023 12:19 AM IST

மடத்துக்குளத்தையடுத்த கணியூரில் முக்கிய சாலையில் குப்பைகளைக் கொட்டி ஊராட்சி நிர்வாகத்தினர் அட்டகாசத்தில் ஈடுபட்டதால் பொதுமக்கள் அவதிப்படும் நிலை ஏற்பட்டது.


மடத்துக்குளத்தையடுத்த கணியூரில் முக்கிய சாலையில் குப்பைகளைக் கொட்டி ஊராட்சி நிர்வாகத்தினர் அட்டகாசத்தில் ஈடுபட்டதால் பொதுமக்கள் அவதிப்படும் நிலை ஏற்பட்டது.

அலட்சியம்

பொது சுகாதாரம் பேணும் வகையில் துப்புரவுப்பணிகள் மேற்கொள்ளும் மிகப்பெரிய பொறுப்பு உள்ளாட்சி நிர்வாகங்களிடம் உள்ளது. குப்பை, கழிவுநீர் அகற்றுதல், கழிப்பறை வசதி ஏற்படுத்துதல், திடக்கழிவு மேலாண்மை போன்றவற்றை உள்ளாட்சி நிர்வாகங்கள் மேற்கொள்ள வேண்டும். ஆனால் பல பகுதிகளில் துப்புரவுப் பணிகளில் அலட்சியம் காட்டப்படுவதால் பொதுமக்கள் பல்வேறு நோய்த்தொற்றுகளுக்கு ஆளாகும் நிலை உள்ளது. அந்தவகையில் மடத்துக்குளம் ஒன்றியம் ஜோத்தம்பட்டி ஊராட்சி நிர்வாகத்தின் அலட்சியப்போக்கால் சாலையோரங்களில் குப்பைகள் குவிந்து கிடந்தது. இதனால் அதிருப்தியடைந்த பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபடும் நிலை ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து குப்பைகளை அப்புறப்படுத்திய ஊராட்சி நிர்வாகத்தினர் கடந்த சில நாட்களுக்கு முன் கணியூர் பேரூராட்சி குப்பைக்கிடங்குக்கு அருகில் குப்பைகளைக் கொண்டு வந்து கொட்டினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பேரூராட்சித்தலைவர், துணைத்தலைவர் மற்றும் கவுன்சிலர்கள் இணைந்து உடுமலை ஆர்.டி.ஓ, மடத்துக்குளம் தாசில்தார், ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோரிடம் மனு அளித்தனர். குப்பைக் கிடங்குக்கு செல்லும் வழித்தடத்தில் செக்போஸ்ட் அமைத்து பூட்டு போட்டு பூட்டினர்.

வாக்குவாதம்

இதனால் அதிருப்தியடைந்த ஜோத்தம்பட்டி ஊராட்சித் தலைவர் குப்பைகளைக் கொண்டு போய் சாலையில் கொட்டுமாறு உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து நேற்று காலை ஜோத்தம்பட்டி ஊராட்சி தூய்மைப் பணியாளர்கள் குப்பைகளை வாகனங்களில் கொண்டு வந்து கணியூர் பகுதியில் சாலையில் கொட்டினர். வணிக நிறுவனங்கள், குடியிருப்புகள் நிறைந்த முக்கிய சாலையில் வண்டி வண்டியாக குப்பைகள் கொட்டப்பட்டதால் அந்த பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசியது.

ஜோத்தம்பட்டி ஊராட்சி நிர்வாகத்தின் அட்டகாசத்தால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போராடத் தயாரானார்கள். சம்பவ இடத்துக்கு வந்த மடத்துக்குளம் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் ரொனால்டு ஷெல்டன் குப்பைகளை உடனடியாக அப்புறப்படுத்த உத்தரவிட்டார். இதனையடுத்து பொக்லைன் எந்திரம் உதவியுடன் குப்பைகள் டிராக்டரில் ஏற்றப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டது. அந்த குப்பைகளை மீண்டும் கணியூர் பேரூராட்சிகுப்பைக் கிடங்குக்கு அருகில் கொண்டு போய் கொட்டினர்.

சுகாதார சீர்கேடு

இதுகுறித்து தகவலறிந்த பேரூராட்சி நிர்வாகத்தினர் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். குப்பைகளைக் கொண்டு வந்த டிராக்டரை வழிமறித்து திருப்பி அனுப்பினர். அவர்களிடம் வட்டார வளர்ச்சி அலுவலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஜோத்தம்பட்டி ஊராட்சியில் சேகரமாகும் குப்பைகளை கொட்டுவதற்கு இடம் இல்லாத நிலையில் உரிய இடம் தேர்வு செய்வதில் ஒன்றிய அதிகாரிகளும் ஊராட்சி நிர்வாகமும் அலட்சியம் காட்டி வருவதே இந்த பிரச்சினைக்கு முக்கிய காரணம் என்று பொதுமக்கள் குற்றம் சாட்டினர். 'உள்ளாட்சி நிர்வாகங்களின் மோதலால் ஊரே நாறுது'. இதற்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்காவிட்டால், சுகாதார சீர்கேடுகளுக்கு காரணமாகும் ஒன்றிய அதிகாரிகள் மற்றும் ஊராட்சி நிர்வாகத்துக்கு எதிராக போராட்டத்தைக் கையிலெடுக்க வேண்டிய நிலை ஏற்படும் என்று பொதுமக்கள் தெரிவித்தனர்.

Related Tags :
மேலும் செய்திகள்