தூத்துக்குடி
உடன்குடி பகுதியில் வேடமணிந்த தசரா பக்தர்கள் வீதி வீதியாக காணிக்கை வசூல்
|உடன்குடி பகுதியில் வேடமணிந்த தசராபக்தர்கள் வீதி வீதியாக காணிக்கை வசூல் செய்தனர்.
உடன்குடி:
உடன்குடி பகுதியில் முத்தாரம்மன் தசரா பக்தர்கள் பல்வேறு வேடங்களில் வீதி, வீதியாக சென்று அம்மன் பெயரில் காணிக்கை வசூல் செய்துவருகின்றனர்.
வேடமணிந்த பக்தர்கள்
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து வருகின்றனர். இந்த பக்தர்கள் கோவிலில் இலவசமாக வழங்கப்பட்ட மஞ்சள் கயிற்றினால் ஆன காப்பை வலது கையில் கட்டிக் கொண்டு, தங்களுக்கு பிடித்தமான வேடங்களை அணிந்து ஊர், ஊராக வீதி, வீதியாக சென்று அம்மன் பெயரில் காணிக்கை வசூல் செய்து வருகின்றனர். உடன்குடி வட்டாரத்தில் வேடமணிந்த பக்தர்கள் உடன்குடி, பரமன்குறிச்சி, சீர்காட்சி, தாண்டவன்காடு, கொட்டங்காடு, செட்டியாபத்து, தாண்டபத்து மற்றும் குலசேகரன்பட்டினம் சுற்றுவட்டார பகுதியில் தசார பக்தர்கள் வீதி, வீதியாக சென்று காணிக்கை வசூல் செய்கின்றனர். அவர்களிடம் பொதுமக்களும் ஆர்வத்துடன் காணிக்கைகளை செலுத்தி வருகின்றனர்.
காணிக்கை செலுத்துவர்
இதேபோன்று தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்கள், வெளிமாநிலங்களிலுள்ள பக்தர்களும் விதவிதமான வேடமணிந்து காணிக்கை வசூல் செய்து வருகின்றனர்.
இந்த பக்தர்கள் வசூல் செய்த காணிக்கைகளை 10-ம் திருநாளான வருகின்ற 24-ந்தேதி குலசகேரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் உண்டியலில் செலுத்துவர் மேலும், அன்று இரவு குலசேகரன்பட்டினம் கடற்கரையில் லட்ச கணக்கான பக்தர்கள் மத்தியில் சூரசம்ஹார காட்சி நடைபெறும். அதை தொடர்ந்து கடலில் பக்தர்கள் புனித நீராடி விரதத்தை முடித்து கொள்வர்.