விருதுநகர்
பாலம் அமைக்கும் பணியின் போது கான்கிரீட் சரிந்ததால் பரபரப்பு
|வத்திராயிருப்பு அருகே புதிய பாலம் கட்டுவதற்காக கான்கிரீட் அமைத்தபோது, எதிர்பாராதவிதமாக கான்கிரீட் சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக தொழிலாளர்கள் தப்பினர்.
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே கூமாபட்டி பஸ்நிலையம் அருகே தரைப்பாலம் சேதம் அடைந்து இருந்தது. மழைக்காலத்தில் பாலத்திற்கு அடியில் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசியதால் அப்பகுதி மக்கள் அவதிப்பட்டனர்.ேமலும் அந்த பாலம் மிகவும் குறுகலாக இருந்ததால் பஸ் செல்வதற்கு சிரமம் ஏற்பட்டது. எனவே அந்த பகுதியில் புதிய பாலம் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து பொதுப்பணித்துறை சார்பில் புதிய பாலம் அமைக்க நிதி ஒதுக்கப்பட்டது.பாலம் அமைக்கும் பணி ராஜபாளையத்தை சேர்ந்த ஒப்பந்தக்காரரிடம் விடப்பட்டது. 2 வாரங்களுக்கு முன்பு பாலம் கட்டும் பணி தொடங்கியது.கம்பிகள் கட்டப்பட்டு கான்கிரீட் போடும் பணி நேற்று நடைபெற்றது. இந்த பணியில் 10 தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக பாதியிலேயே கான்கிரீட் சரிந்து விழுந்தது.இந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக தொழிலாளர்கள் உயிர்தப்பினர். இது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.இந்த சம்பவம் குறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.