மக்கள் கூடும் இடங்களில் இனிப்பு வழங்கி கொண்டாட வேண்டும் - தி.மு.க.வினருக்கு துரைமுருகன் அறிவுறுத்தல்
|கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் தொடக்க நாளில் மக்கள் கூடும் இடங்களில் இனிப்பு வழங்கி கொண்டாட வேண்டும் என தி.மு.க.வினருக்கு துரைமுருகன் அறிவுறுத்தியுள்ளார். இதுகுறித்து தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தி.மு.க. அரசின் மிக முக்கியமான மக்கள் நலத்திட்டமான 'கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம்' அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15-ந் தேதி, காஞ்சீபுரத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்படுகிறது. இதற்காக பெறப்பட்ட 1 கோடியே 63 லட்சம் விண்ணப்பங்களில் 1 கோடியே 6 லட்சம் பேருக்கு இந்த உரிமைத்தொகை வழங்கப்படுகிறது. நிராகரிக்கப்பட்டவர்களுக்கு என்ன காரணம்? என்பதையும், மறுபடியும் விண்ணப்பிப்பதற்கான வாய்ப்பு வழங்கப்படும் என்றும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
ஒரு கோடி பெண்கள் என்பது கிட்டத்தட்ட ஒரு கோடி குடும்பங்கள் என்பதை நாம் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். கடுமையான நிதிச்சூழலிலும் ஒரு கோடி மகளிர் பயன்பெறும் வகையில் தொடங்கப்படும் இத்திட்டத்தை அனைத்து மக்களிடமும் முழுமையாக கொண்டு சேர்க்க வேண்டியது மிக அவசியம்.
இத்திட்டத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் பின்வரும் செயல்பாடுகளை மேற்கொள்ள அனைத்து ஒன்றிய-நகரப்பகுதி பேரூர்- கிளைச்செயலாளர்கள் மற்றும் அனைத்து அணி நிர்வாகிகளுக்கும் மாவட்ட செயலாளர்கள் அறிவுறுத்த வேண்டும்.
* 1,000 ரூபாய் திட்டத்தை முன்னிறுத்தி வீடுகளில் 'கலைஞர் உரிமைத் தொகைக்கு நன்றி', 'உரிமைத்தொகை 1,000' போன்ற வாசகங்களை எழுதி கோலமிடவேண்டும். அனைத்து நிர்வாகிகள் வீடுகளிலும் கோலமிடப்படுவதை மாவட்ட செயலாளர்கள் உறுதி செய்ய வேண்டும்.
* மக்கள் கூடும் இடங்களில் அனுமதிக்கப்பட்ட இடங்களில் சுவரொட்டி ஒட்டி விளம்பரப்படுத்த வேண்டும்.
* பஸ் நிலையங்கள், அங்காடிகள் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் இனிப்பு வழங்கி கொண்டாடிட வேண்டும். இனிப்பு வழங்கும்போது சிறு துண்டறிக்கையை சேர்த்து வழங்கிட வேண்டும்.
* மகளிருக்கு கட்டணமில்லா பஸ், புதுமைப்பெண் திட்டம், நான் முதல்வன், முதல்-அமைச்சரின் காலை உணவுத்திட்டம், கலைஞர் உரிமைத் தொகை ஆகிய திட்டங்களை முன்னிலைப்படுத்தும் வகையில் சுவர் விளம்பரங்களை எழுதவேண்டும் என மாவட்ட செயலாளர்கள் அனைத்து நிர்வாகிகளையும் வலியுறுத்த வேண்டும்.
* உள்ளூரில் ஆட்டோ ஏற்பாடு செய்து குறைந்தபட்சம் 2 நாட்களுக்கு அனைத்து பகுதிகளிலும் தி.மு.க. அரசின் இரண்டாண்டு சாதனைகளை விளக்கி பிரசாரம் செய்திடவேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.