திருவள்ளூர்
பணிச்சுமை காரணமாக பூச்சி மருந்து குடித்து டிரைவர் தற்கொலை முயற்சி
|பணிச்சுமை காரணமாக பூச்சி மருந்து குடித்து டிரைவர் தற்கொலை முயற்சி மேற்கொண்டார்.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த மாம்பாக்கசத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் குருவய்யா (வயது 52). இவர் திருத்தணி பஸ் டெப்போவில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 7-ந் தேதி வழக்கம் போல் வேலைக்கு சென்றார். டிரைவர் பற்றாக்குறையால் நேற்று முன்தினமும் அதே பஸ்சை குருவய்யா இயங்கினார். நேற்று காலை பணி முடிந்ததும் பஸ்சை டெப்போவில் நிறுத்திவிட்டு வீட்டுக்கு செல்ல முயன்றார். அப்போது டெப்போ அதிகாரி குருவய்யாவை கூப்பிட்டு இன்று சிறப்பு பஸ் இயக்கப்பட வேண்டும் என்பதால் மீண்டும் டிரைவர் பணி செய்ய வேண்டும் என்று கட்டாயப்படுத்தியதாக கூறப்படுகிறது.
2 நாட்கள் தொடர்ந்து வேலை செய்ததால், என் உடம்பு ஒத்துழைக்கவில்லை. ஆகையால் என்னால் சிறப்பு பஸ் இயக்க முடியாது என கூறியும் அதிகாரி நிர்ப்பந்தித்ததாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த குருவய்யா பூச்சி மருந்து வாங்கி வந்து டெப்போ முன்பு குடித்து மயங்கி விழுந்தார். சக ஊழியர்கள் அவரை மீட்டு திருத்தணி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இது குறித்து திருத்தணி போலீசார் விசாரித்து வருகின்றனர்.