தஞ்சாவூர்
மழை பெய்ததால் ஏரி, குளங்கள் நிரம்பின
|பட்டுக்கோட்டை பகுதியில் பலத்த மழை பெய்தது. சேதுபாவாசத்திரத்தில் பெய்த பலத்த மழையின் காரணமாக ஏரி, குளங்கள் நிரம்பின.
சேதுபாவாசத்திரம்
இந்த ஆண்டு மேட்டூர் அணையில் இருந்து முன்கூட்டியே தண்ணீர் திறக்கப்பட்டாலும் சேதுபாவாசத்திரம் கடைமடை பகுதிக்கு 5 நாட்கள் வீதம் முறை வைத்துதான் தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் 10-க்கும் மேற்பட்ட பெரிய ஏரிகளும், 400-க்கும் மேற்பட்ட சிறிய குளங்களும் நிரம்பாமல் வறண்டு கிடந்தன. இதனால் விவசாய பணிகளை தொடங்க முடியாமல் விவசாயிகள் தவித்து வந்தனர்.
இந்தநிலையில் கடந்த 2 நாட்களாக இரவு நேரங்களில் பெய்த பலத்த மழையால் வறண்டு கிடந்த 300-க்கும் மேற்பட்ட குளங்கள் நிரம்பி வடிகால் வாரிகளில் தண்ணீர் செல்கிறது. அத்துடன் பெரிய ஏரிகளில் முக்கால் பகுதி தண்ணீர் தேங்கியுள்ளது. மேலும் தற்போது கடைமடைக்கு தொடர்ந்து தண்ணீர் வழங்கப்படுகிறது. இதன்மூலம் சாகுபடி பணிகளை தொடங்கிவிடலாம் என கடைமடை விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
மதுக்கூர்
மதுக்கூர் பகுதியில் நேற்று முன்தினம் இரவு 9-30 மணியளவில் இடி-மின்னலுடன் கன மழை பெய்தது. இந்த மழை அதிகாலை 3 மணி வரை நீடித்தது. மழையின் காரணமாக பல இடங்களில் மின்சாரம் தடைபட்டது.