கோயம்புத்தூர்
மீன்கள் வரத்து அதிகரிப்பால் கறிக்கோழி விலை குறைந்தது
|பொள்ளாச்சி பகுதியில் மீன்கள் வரத்து அதிகரிப்பால் கறிக்கோழி விலை குறைந்தது. கிலோ ரூ.128-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
பொள்ளாச்சி
பொள்ளாச்சி பகுதியில் மீன்கள் வரத்து அதிகரிப்பால் கறிக்கோழி விலை குறைந்தது. கிலோ ரூ.128-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கறிக்கோழி உற்பத்தி
தமிழகத்தில் பல்லடம், சுல்தான்பேட்டை, உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி, ஈரோடு, நாமக்கல் உள்பட பல்வேறு இடங்களில் சுமார் 25 ஆயிரம் கறிக்கோழி உற்பத்தி பண்ணைகள் உள்ளன. இந்த பண்ணைகளில் தினமும் சராசரியாக 2 கிலோ எடை உள்ள 15 லட்சம் கறிக்கோழிகள் உற்பத்தி செய்யப்பட்டு, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் ஆந்திரா, கேரளா, கர்நாடகா, புதுச்சேரி போன்ற வெளிமாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.
கறிக்கோழி பண்ணை கொள்முதல் விலை பல்லடத்தில் உள்ள கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழு (பி.சி.சி.) சார்பில் தினமும் நிர்ணயம் செய்யப்படுகிறது. தற்போது ஒரு கிலோ கறிக்கோழி உற்பத்தி செய்ய உற்பத்தியாளர்களுக்கு சராசரியாக ரூ.95 வரை செலவாகிறது.
மீன்பிடி தடை காலம்
இதற்கிடையில் கடந்த 1-ந் தேதி ஒரு கிலோ கறிக்கோழி பண்ணை கொள்முதல் விலை ரூ.129(உயிருடன்) ஆக இருந்தது. பின்னர் தமிழகத்தில் மீன் பிடி தடை காலம் தொடங்கியதால், கிலோவிற்கு ரூ.2, ரூ.3 என உயர்ந்து கடந்த 15-ந் தேதி கறிக்கோழி பண்ணை கொள்முதல் விலை ரூ.143 ஆக உயர்ந்தது. இது கறிக்கோழி உற்பத்தியாளர்களை மகிழ்ச்சி அடைய செய்தது.
இதையடுத்து மீன்பிடி தடை காலம் முடிந்தது. இதனால் பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, கோவை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு மீன் வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது.
விலை குறைந்தது
இதன் எதிரொலியாக கறிக்கோழி பண்ணை கொள்முதல் விலை கிலோ ரூ.143-ல் இருந்து ரூ.128 ஆக குறைந்துள்ளது. கடந்த 10 நாட்களில் கறிக்கோழி பண்ணை கொள்முதல் விலை கிலோவிற்கு ரூ.15 சரிந்துள்ளது. இதன் காரணமாக கடைகளில் கிலோ ரூ.290 முதல் ரூ.300 வரை விற்பனை செய்யப்பட்ட கறிக்கோழி இறைச்சி தற்போது கிலோ ரூ.250 முதல் ரூ.260 வரை விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சில இடங்களில் விலையில் மாற்றம் காணப்படுகிறது. கறிக்கோழி விலை தொடர்ந்து சரிந்து வருவதால் கறிக்கோழி நுகர்வோர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். ஆனால் உற்த்தியாளர்கள் கவலை அடைந்து உள்ளனர்.