திண்டுக்கல்
வெளுத்து வாங்கிய மழையால் சாலைகளில் கரைபுரண்டு ஓடிய வெள்ளம்
|திண்டுக்கல்லில் வெளுத்து வாங்கிய மழையால் சாலைகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.
கொட்டித்தீர்த்த கனமழை
திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பகல் வேளையில் கடும் வெயில் சுட்டெரித்து வந்தது. இரவு நேரங்களில் கூட அதன் தாக்கம் இருந்தது. இதனால் புழுக்கத்தால் பொதுமக்கள் அவதியடைந்து வந்தனர். கோடை வெயிலை மிஞ்சும் வகையில் வெயில் வாட்டி வதைத்தது. இருப்பினும் 2 நாட்களாக மாலையில் குளிர்ந்த காற்றும், சாரல் மழை பெய்தது.
இந்தநிலையில் நேற்று காலை வானம் மப்பும், மந்தாரமாக காணப்பட்டது. மதியம் 1 மணிக்கு மேல் கருமேகங்கள் வானில் திரண்டு மழை வருவதற்கான சூழல் நிலவியது. சிறிது நேரத்தில் மழை பெய்தது. சுமார் 1 மணி நேரம் இந்த மழை கொட்டித்தீர்த்தது. பின்னர் மாலையில் சிறிது நேரம் பலத்த மழை பெய்தது. அதன்பிறகு சாரல் மழை விட்டுவிட்டு பெய்தபடி இருந்தது.
தத்தளித்த வாகனங்கள்
வெளுத்து வாங்கிய இந்த மழையால் திண்டுக்கல் நகரின் முக்கிய சாலைகளிலும், வீதிகளிலும் மழைநீர் வெள்ளமென கரைபுரண்டு ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கியது. அந்த வகையில் திண்டுக்கல் பஸ் நிலைய சாலை, ரெயில் நிலைய சாலை, திருச்சி சாலையில் என்.ஜி.ஓ. காலனி உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் சாலைகளில் வெள்ளமாக கரைபுரண்டு ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதியடைந்தனர்.
குறிப்பாக திண்டுக்கல் வேடப்பட்டி ஒத்தக்கண் பாலம் சுரங்கப்பாதையில் மழைநீர் குளம்போல் தேங்கியது. இதனால் அந்த வழியாக சென்ற இருசக்கர வாகனங்கள், ஆட்டோ, கார், பஸ் உள்ளிட்டவை மழைநீர் தத்தளித்தபடி சென்றன.
இருப்பினும் இந்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.