< Back
மாநில செய்திகள்
அரசின் நடவடிக்கைகளால் மழை வெள்ள பாதிப்புகள் குறைவு: டெல்லியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி
மாநில செய்திகள்

அரசின் நடவடிக்கைகளால் மழை வெள்ள பாதிப்புகள் குறைவு: டெல்லியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி

தினத்தந்தி
|
19 Dec 2023 12:06 PM IST

தென் மாவட்டங்களில் வானிலை ஆய்வு மையம் அறிவித்ததை விட அதிக அளவில் மழை பெய்துள்ளது.

டெல்லி,

மிக்ஜம் புயலால் ஏற்பட்ட மழை வெள்ளத்தால், சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் கடுமையாக பாதிப்பு ஏற்பட்டது. இதை சரிசெய்ய இடைக்கால நிவாரணமாக ரூ.5,060 கோடியும், நிரந்தர நிவாரணமாக ரூ.12,659 கோடியும் வேண்டும் என்று மத்திய அரசை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி இருந்தார். இது சம்பந்தமாக அவர் பிரதமர் நரேந்திரமோடியை சந்தித்து பேசுவதற்காக நேரம் கேட்டிருந்தார். அதற்கான அனுமதி கிடைத்ததால், கோவையிலிருந்து விமானம் மூலம் நேற்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி புறப்பட்டு சென்றார்.

இந்த நிலையில் டெல்லியில் பேட்டியளித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்,

கடந்த 4- ம் தேதியன்று சென்னையில் புயல் காரணமாக மிக கனமழை பெய்தது. இதில் மழைக்கு முன்னரே தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கை மூலம் பெருமளவிலான சேதங்கள் தடுக்கப்பட்டன. இதனால் மக்கள் பாதிப்பில் இருந்து பாதுகாக்கப்பட்டனர். மழை நின்றதும் உடனடியாக மீட்புப்பணிகள் தொடங்கப்பட்டு போக்குவரத்து சீர் செய்யப்பட்டது. 95 சதவீதம் மின் இணைப்புகள் 3 நாட்களுக்குள் சரி செய்யப்பட்டன.

புறநகரில் ஒரு சில பகுதிகளை தவிர மற்ற அனைத்து பகுதிகளும் 4 நாட்களுக்குள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பின. பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன. பல்வேறு அமைச்சர்கள், அதிகாரிகள், 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட களப்பணியாளர்கள் களத்தில் இருந்தனர். புயலுக்கு முன்னர் மற்றும் புயலுக்கு பின்னர் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மூலம் பாதிப்பு பெருமளவில் குறைந்தது. இதுகுறித்து ஆய்வு செய்ய மத்திய அரசின் குழுவினர் வந்தனர். அந்த குழு மீட்பு பணிகள் குறித்து பாராட்டுகளை தெரிவித்திருந்தது.

மேலும் மத்திய மந்திரி ராஜ்நாத் சிங்கும் பார்வையிட்டார். வெள்ளப்பாதிப்புக்கு உடனடியாக 5,060 கோடி ரூபாய் நிதி கேட்கப்பட்டது. ஆனால் 450 கோடி ரூபாயை மத்திய அரசு வழங்கியது. மேலும் மத்திய குழுவிடம் தற்காலிக நிதியாக ரூ.7,033 கோடியும், நிரந்தர தீர்வு பணிகளுக்காக ரூ.12,560 கோடியும் வழங்குமாறு கோரிக்கை வைத்துள்ளேன். எனினும் மத்திய அரசின் நிதியை எதிர்பாராமல் ரூ.6,000 நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் மத்திய அரசின் முழுமையான நிவாரண நிதியை பெற பிரதமரை சந்திக்க இருந்த நிலையில் தென் மாவட்டங்களில் கனமழை கொட்டித்தீர்த்தது. இதில் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்கள் மிகவும் பாதிக்கப்பட்டன. வானிலை ஆய்வு மையம் அறிவித்ததை விட அதிக அளவில் மழை பெய்துள்ளது. உதாரணமாக காயல்பட்டினத்தில் 94 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

எனினும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இதில் மீட்புப் பணியை மேற்கொள்ள உடனடியாக 8 அமைச்சர்கள், 10 ஐ.ஏ .எஸ். அதிகாரிகள் அனுப்பி வைக்கப்பட்டனர். தீயணைப்பு படையினர், பேரிடர் மீட்பு படையினர் மீட்பு பணிகளில் ஈடுபடுத்த பட்டனர். இதன் மூலம் 12,653 பேர் மீட்கப்பட்டு 141 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் துரிதமாக மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் பாதிக்கப்பட்ட மக்களை மீட்டு அவர்களின் வாழ்வாதாரங்களை திரும்ப வழங்க உடனடியாக தேசிய பேரிடர் நிதியில் இருந்து நிவாரணம் வழங்க பிரதமர் மோடியை வலியுறுத்த உள்ளேன், என்று கூறினார்.

மேலும் செய்திகள்