சென்னை
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விமானங்களில் பயணிகள் கூட்டம் அதிகரிப்பு - கட்டணமும் 3 மடங்கு உயர்ந்தது
|தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விமானங்களில் பயணிகள் கூட்டம் அதிகரித்து உள்ளது. இதனால் விமான கட்டணமும் 3 மடங்கு உயர்ந்து காணப்பட்டது.
தீபாவளி பண்டிகை நாளை (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது. தீபாவளி விடுமுறையுடன் சனி, ஞாயிறு வார விடுமுறையும் தொடர்ச்சியாக வருவதால் சென்னை மற்றும் புறநகர் பகுதியில் வசிக்கும் வெளியூர் மக்கள், தங்களுடைய சொந்த ஊர்களில் தீபாவளியை கொண்டாடுவதற்காக புறப்பட்டு செல்கின்றனா். இதனால் பஸ், ரெயில்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது.
இதற்காக சிறப்பு பஸ்கள், சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டன. ஆனாலும் பயணிகள் கூட்டம் அதிகமாக உள்ளது. இதனால் ஆம்னி பஸ் கட்டணமும் பல மடங்கு உயர்ந்து உள்ளது. கடைசி நேரத்தில் பயணிகள் சிலர் தங்கள் சொந்த வாகனங்களில் செல்கின்றனர்.
இதேபோல் விமானங்களில் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு செல்லும் பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து உள்ளது. இதனால் சென்னை விமான நிலையத்தை நோக்கி படையெடுப்பதால் சென்னை விமான நிலையம் பயணிகள் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது. சென்னை விமான நிலையத்தில் வழக்கமாக ஒரு நாளைக்கு 35 ஆயிரத்தில் இருந்து 40 ஆயிரம் வரை பயணிகள் விமானத்தில் பயணித்து வருகின்றனர். ஆனால் தற்போது அந்த எண்ணிக்கை 50 ஆயிரத்தையும் கடந்து இருக்கிறது.
சென்னை விமான நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிகரித்ததையொட்டி விமானங்களின் பயண கட்டணமும் பல மடங்கு உயர்ந்துள்ளது. தீபாவளி திருநாள் விழா இந்தியா முழுவதும் கொண்டாடப்படுவதால் சென்னையில் உள்ள வடமாநிலத்தவா்கள் பெருமளவில் விமானங்களில் தங்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு செல்வதால் வட மாநிலங்களுக்கு செல்லும் விமான கட்டணங்கள் 3 மடங்கு வரை உயர்ந்துள்ளன.
சென்னை-டெல்லி இடையே வழக்கமான கட்டணம் ரூ 6,500. ஆனால் தற்போது ரூ.14 ஆயிரம்-ரூ15 ஆயிரம் வரை அதிகரித்து உள்ளது. சென்னை-கொல்கத்தா இடையே ரூ.7,500 ஆக இருந்த கட்டணம் ரூ.20 ஆயிரம்-ரூ.22 ஆயிரம் வரையும், சென்னை- புவனேஸ்வர் இடையே ரூ.6 ஆயிரமாக இருந்த கட்டணம் தற்போது ரூ.15 ஆயிரம்-ரூ.16 ஆயிரம் வரை உயர்ந்து உள்ளது.
சென்னை-பெங்களூரு இடையே வழக்கமான கட்டணம் ரூ.3,500. தற்போது ரூ.4,500- ரூ.6 ஆயிரம் என உயர்ந்து விட்டது. சென்னை-கொச்சி மற்றும் திருவனந்தபுரம் இடையான வழக்கமான கட்டணம் ரூ.4 ஆயிரமாக இருந்தது. தற்போது ரூ.14 ஆயிரம் வரை இருக்கிறது.
அதுபோல் தமிழ்நாட்டுக்குள் இயக்கப்படும் விமானங்களான சென்னை-மதுரை இடையே வழக்கமான ரூ.4,200 கட்டணம் தற்போது ரூ.15 ஆயிரம் வரை உள்ளது. சென்னை-திருச்சி இடையே ரூ.4,500 ஆக இருந்த கட்டணம் ரூ.7,500- ரூ.10 ஆயிரமாகவும், சென்னை- தூத்துக்குடிக்கு ரூ.4,500 ஆக இருந்த கட்டணம் ரூ.9,500 - ரூ.11,500 ஆகவும், சென்னை- கோவைக்கு ரூ.3,500 ஆக இருந்த கட்டணம் ரூ.7,500- ரூ.11,500 ஆகவும் அதிகரித்து உள்ளது.
விமான கட்டணம் பல மடங்கு அதிகரித்ததாலும் பயணிகள் தங்களுடைய சொந்த ஊரில் தீபாவளியை கொண்டாடும் ஆா்வத்தில் கட்டணம் பற்றி யோசிக்காமல் ஆர்வமுடன் டிக்கெட் எடுத்து விமானங்களில் பயணிக்கின்றனர்.
இதுபற்றி சென்னை விமான நிலைய அதிகாரிகளிடம் கேட்டபோது, "முக்கியமான திருவிழாக்களின் போது பயணிகள் கூட்டம் பல மடங்கு அதிகரிக்கும் காரணத்தால் குறைந்த கட்டண டிக்கெட்கள் அனைத்தும் முன்னதாகவே விற்றுதீர்ந்து விடுவதால் அதிக கட்டண டிக்கெட்டுகள் மட்டுமே மீதம் இருக்கின்றன. கடைசி நேரத்தில் பயணம் செய்யபவர்களுக்கு வேறு வழியின்றி அதிக கட்டண டிக்கெட்தான் இருக்கிறது" என்றனர்.