தொடர் விடுமுறையால் விமான டிக்கெட் கட்டணம் பல மடங்கு உயர்வு
|தொடர் விடுமுறையால் சுற்றுலா செல்ல பயணிகள் ஆர்வம் காட்டுவதால் சென்னையில் இருந்து வெளிநாடு, வெளிமாநிலங்களுக்கு செல்லும் விமானங்களில் டிக்கெட் கட்டணம் பல மடங்கு அதிகரித்துள்ளது.
மீனம்பாக்கம்,
தமிழ்நாட்டில் மிலாடி நபியையொட்டி இன்று (வியாழக்கிழமை) அரசு விடுமுறை ஆகும். இடையில் வெள்ளிக்கிழமை ஒருநாள் தவிர்த்து சனி, ஞாயிறு மற்றும் வருகிற 2-ந் தேதி (திங்கட்கிழமை) காந்தி ஜெயந்தி என்று தொடர்ச்சியாக விடுமுறை தினங்கள் ஆகும். பள்ளிகளிலும் காலாண்டு விடுமுறை தொடங்கிவிட்டது.
தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ், ரம்ஜான் போன்ற பண்டிகை காலங்களில் தமிழ்நாட்டுக்குள் செல்லும் விமானங்களில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழியும். ஆனால் தற்போது அலுவலகம் உள்ளிட்ட வேலைக்கு செல்பவர்கள் வெள்ளிக்கிழமை ஒரு நாள் விடுமுறை எடுத்தால் தொடர்ந்து 5 நாள் விடுமுறை என்பதால் சென்னையில் வசிக்கும் பலர் தங்கள் குடும்பத்துடன் வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களுக்கு சுற்றுலா செல்ல ஆர்வம் காட்டுகின்றனர். இதனால் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு செல்லும் விமானங்களில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிகிறது.
டிக்கெட் கட்டணம் உயர்வு
இதன் காரணமாக சுற்றுலா தளங்களுக்கு செல்லும் விமானங்களிலும் டிக்கெட் கட்டணம் பலமடங்கு உயர்ந்து உள்ளன. சென்னையில் இருந்து சுற்றுலா தளமான தாய்லாந்து நாட்டின் பாங்காக் செல்ல வழக்கமான விமான கட்டணம் ரூ.9,720 ஆகும். ஆனால் இன்றைய (28-ந் தேதி) கட்டணம் ரூ.32,581 ஆகவும், நாளைய (29-ந் தேதி) கட்டணம் ரூ.28,816 ஆகவும் உள்ளது..
துபாய்க்கு வழக்கமான கட்டணம் ரூ.10,558. இன்றைய கட்டணம் ரூ.21,509, நாளைய கட்டணம் ரூ.20,808. சிங்கப்பூர் வழக்கமான கட்டணம் ரூ.9,371. இன்றைய கட்டணம் ரூ.20,103, நாளைய கட்டணம் ரூ.18,404.
மலேசியாவின் கோலாலம்பூருக்கு வழக்கமான கட்டணம் ரூ.7,620. இன்றயை கட்டணம் ரூ.15,676, நாளைய கட்டணம் ரூ.14,230. இலங்கையின் கொழும்பு நகருக்கு வழக்கமான கட்டணம் ரூ.6,698. இன்றைய கட்டணம் ரூ.11,234, நாளைய கட்டணம் ரூ.10,630.
உள்நாட்டு விமானம்
இது போல் இந்தியாவுக்குள் உள்ள சுற்றுலா தளங்களுக்கு செல்லும் உள்நாட்டு விமான டிக்கெட் கட்டணமும் உயர்ந்து உள்ளது.
சென்னை-மைசூர் இடையே வழக்கமான விமான கட்டணம் ரூ.2,558. இன்றைய கட்டணம் ரூ.7,437. நாளைய கட்டணம், ரூ.5,442. சென்னை-கோவா இடையே வழக்கமான கட்டணம் ரூ.4,049. இன்றைய கட்டணம் ரூ.8,148. நாளைய கட்டணம் ரூ.9,771.
வெளிநாடுகள், வெளிமாநிலங்கள் செல்லும் விமான கட்டணங்கள் தொடர் விடுமுறையயையொட்டி அதிகரித்துள்ளன. ஆனால் தமிழ்நாட்டில் மதுரை, திருச்சி, கோவை போன்ற இடங்களுக்கு செல்லும் விமானங்களில் கட்டணங்கள் பெரிய அளவில் அதிகரிக்கவில்லை.
தூத்துக்குடி விமானம் கட்டணம்
ஆனால் சென்னையில் இருந்து தூத்துக்குடி செல்லும் விமான கட்டணம் மட்டும் அதிகரித்து உள்ளது. சென்னை-தூத்துக்குடி இடையே வழக்கமான கட்டணம் ரூ.3,853. ஆனால் இன்றைய கட்டணம் ரூ.11,173. நாளைய கட்டணம் ரூ.9,975.
தொடர் விடுமுறையை ஒட்டி சென்னை விமான நிலைய பன்னாட்டு மற்றும் உள்நாட்டு முனையம் புறப்பாடு பகுதியில் பயணிகளின் கூட்டம் அதிக அளவில் உள்ளது. சென்னை விமான நிலையத்தில் கடந்த சில ஆண்டுகளோடு ஒப்பிடுகையில் இந்த ஆண்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை பெருமளவு அதிகரித்து உள்ளது. விமானங்களில் குறைந்த கட்டண டிக்கெட்டுகள் நிரம்பியதால் கூடுதல் கட்டணம் கொண்ட டிக்கெட்டுகள் தான் உள்ளது. இது சாதாரண நடைமுறைதான் என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.