< Back
மாநில செய்திகள்
குப்பை அள்ளுவதில்லைகுடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதால் துர்நாற்றம் வீசுகிறதுகடலூர் மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு
கடலூர்
மாநில செய்திகள்

குப்பை அள்ளுவதில்லைகுடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதால் துர்நாற்றம் வீசுகிறதுகடலூர் மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு

தினத்தந்தி
|
18 March 2023 12:15 AM IST

அதிகாரிகள் மதிப்பதில்லை என்றும், மாநகரில் குப்பைகளை அள்ளுவதில்லை என்றும், குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதால் துர்நாற்றம் வீசுவதாகவும் கடலூர் மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் குற்றம்சாட்டினர்.



கடலூர் மாநகராட்சி கூட்டம் நேற்று மன்ற அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு மேயர் சுந்தரி ராஜா தலைமை தாங்கினார். துணை மேயர் தாமரைச்செல்வன், ஆணையாளர் நவேந்திரன், பொறியாளர் மகாதேவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், மாநகராட்சி கவுன்சிலர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு மேயர், ஆணையாளர் உள்ளிட்ட அலுவலர்கள் அளித்த பதில்களும் விவரம் வருமாறு:-

சரிதா (வி.சி.க.) :- ஏப்ரல் 14-ந்தேதி அம்பேத்கர் பிறந்த நாள் விழா வருகிறது. அதற்குள் மஞ்சக்குப்பத்தில் உள்ள அம்பேத்கர் சிலையை சீரமைத்து தர வேண்டும்.

ஆணையாளர்:- சட்ட விதிமுறைகளுக்கு ஏற்ப உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

மவுனமாக வெளியேறிய கவுன்சிலர்கள்

அந்த சமயத்தில் தி.மு.க.வை சேர்ந்த 10 கவுன்சிலர்கள் கூட்டத்தை விட்டு மவுனமாக வெளியேறினர். அவர்கள் எதற்காக வெளியேறினார்கள் என்ற காரணத்தை கூறவில்லை.

விஜயலட்சுமி செந்தில் (தி.மு.க. ஆதரவு):- எனது வார்டு மக்களும் சட்டமன்ற தேர்தலில் வாக்களித்தனர். ஆனால் சட்டமன்ற உறுப்பினர் நிதி எனது வார்டுக்கு வரவில்லை. வார்டில் பன்றிகள் தொல்லை அதிகமாக இருக்கிறது. இதை கட்டுப்படுத்த வேண்டும்.

ஆணையாளர்:- சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியை எம்.எல்.ஏ. தான் முடிவு செய்வார். இருப்பினும் கோரிக்கை குறித்து பரிசீலனை செய்யப்படும்.

செந்தில்குமாரி இளந்திரையன் (தி.மு.க.):- எனது வார்டில் சேதமடைந்த கருமகாரிய கொட்டகையையும், குட்டையையும் சீரமைத்து தர வேண்டும். அங்கன்வாடி மையம் அமைத்து தர வேண்டும்.

அதிகாரிகள் மதிப்பதில்லை

பார்வதி(தி.மு.க.):- கடலூர் அரசு ஆஸ்பத்திரி அருகில் உள்ள சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இந்த சாலையை சீரமைத்து தர வேண்டும். நாய்கள் தொல்லை அதிகமாக இருக்கிறது. இதையும் பிடிக்க வேண்டும்.

மேயர்:- உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

கண்ணன் (த.வா.க.) :- எனது வார்டில் குளம் தூர்வாரும் பணிக்கான பூமி பூஜைக்கு என்னை தாமதமாக அழைத்தார்கள். வேறு நபரை வைத்து அந்த நிகழ்ச்சியை நடத்துகிறார்கள். இது சரியா? முன்கூட்டியே தகவல் தெரிவிக்க வேண்டும். கவுன்சிலர்களை அதிகாரிகள் மதிப்பதில்லை. எனது வார்டில் 15 வீடுகளை அகற்றிய போது, அவர்களுக்கு நான் உதவி செய்தேன். ஆகவே அவர்களை வைத்து மீண்டும் பூமி பூஜை விழா நடத்த அனுமதிக்க வேண்டும்.

மேயர்:- கவன குறைவு ஏற்பட்டு இருக்கும். மற்றொரு நாளில் பூமி பூஜை நடத்த ஏற்பாடு செய்யப்படும்.

குடிநீரில் கழிவுநீர்

கவிதா (தி.மு.க.) :- பனங்காட்டு காலனியில் குடிநீரில் கழிவுநீர் கலந்து வருகிறது. துர்நாற்றமும் வீசுகிறது. இதனால் பொதுமக்கள் தண்ணீரை குடிக்க முடியாமல் சிரமப்படுகின்றனர். சில இடங்களுக்கு தண்ணீரே வருவதில்லை.

சுபாஷினி (தி.மு.க.) :- சொரக்கல்பட்டில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதை அகற்ற வேண்டும்.

ஆணையாளர்:- குப்பை பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

பாலசுந்தர் (தி.மு.க.):- 39-வது வார்டில் குடிநீரில் கழிவுநீர் கலந்து நிறம் மாறி வருகிறது. குடிக்க முடியவில்லை என்று கூறி, நிறம் மாறிய தண்ணீர் பாட்டிலை மேயரிடம் காண்பித்து பேசினார். மேலும் புதிதாக கட்டப்பட்டு வரும் மீன்பிடி துறைமுகத்தில் படகுகளை நிறுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதை சீரமைக்க வேண்டும் என்றார்.

மேயர்:- குடிநீர் பிரச்சினை சரி செய்யப்படும். மீன்பிடி துறைமுகம் மாநகராட்சி சார்பில் அமைக்கவில்லை. இது பற்றி அரசுக்கு தெரியப்படுத்தப்படும்.

சரஸ்வதி (காங்கிரஸ்) :- எனது வார்டில் உயர் கோபுர மின் விளக்கு அமைத்து தர வேண்டும்.

மேயர்: நடவடிக்கை எடுக்கப்படும்.

செல்வபுஷ்பலதா (வி.சி.க.) :- சாவடி, செம்மண்டலத்தில் புதிய பஸ் நிறுத்தம் அமைத்து தர வேண்டும். அரசு தொழிற்பயிற்சி நிலையத்திற்கு சுற்றுச்சுவர் அமைத்து தர வேண்டும். இவ்வாறு விவாதங்கள் நடந்தது.

கூட்டத்தில் அருள்பாபு, சங்கீதா, சாய்துன்னிஷா, சங்கீதா செந்தில், சரஸ்வதி, சுபாஷினி, ஆராமுது உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர்.

மேலும் செய்திகள்