வரத்து குறைந்ததால், கோயம்பேடு சந்தையில் காய்கறி விலை கடும் உயர்வு
|மழை காரணமாக கோயம்பேடு காய்கறி சந்தைக்கு காய்கறிகளின் வரத்து குறைந்துள்ளதால், விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
போரூர்,
மாண்டஸ் புயல் மழை காரணமாக கோயம்பேடு மார்க்கெட்டுக்கு நேற்று முன்தினம் பொருட்கள் வாங்க வரும் சில்லரை வியாபாரிகள் மற்றும் காய்கறி கடைக்காரர்களின் வருகை பாதியாக குறைந்தது. இதனால் பச்சை காய்கறிகளின் விலை கடும் வீழ்ச்சி அடைந்தது. மேலும் விற்பனை ஆகாமல் 500 டன் வரை காய்கறிகள் தேக்கம் அடைந்தன.
இந்த நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் காய்கறி உற்பத்தி நடைபெற்று வரும் பெரும்பாலான பகுதிகளில் பரவலாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக விவசாய தொழிலாளர்கள் தோட்டத்திற்கு வேலைக்கு செல்லவில்லை. இதனால் கோயம்பேடு சந்தைக்கு வரும் காய்கறி வரத்து குறைந்துவிட்டது.
இன்று தக்காளி 39 லாரிகள், வெங்காயம் 50 லாரிகள் என மொத்தம் 350 லாரிகளில் காய்கறிகள் விற்பனைக்கு வந்தன. வரத்து குறைவு காரணமாக கத்தரிக்காய், அவரைக்காய், பீன்ஸ், கேரட் உள்ளிட்ட பச்சை காய்கறிகளின் விலை திடீரென அதிகரித்து உள்ளது. மொத்த விற்பனை கடைகளில் நேற்று முன்தினம் ஒரு கிலோ ரூ.13-க்கு விற்ற தக்காளி இன்று விலை அதிகரித்து ரூ.22-க்கும், ஒரு கிலோ ரூ.10க்கு வாங்கி செல்ல யாரும் ஆர்வம் காட்டாத பீன்ஸ் மற்றும் உஜாலா கத்தரிக்காய் ஆகிய காய்கறிகள் இன்று பல மடங்கு அதிகரித்து ஒரு கிலோ ரூ.70-க்கு விற்கப்படுகிறது.
இதேபோல் ஒரு கிலோ ரூ100-க்கு விற்ற முருங்கைக்காய் ரூ.150-க்கும், கிலோ ரூ.30-க்கு விற்ற ஊட்டி கேரட் ரூ.45-க்கும், கிலோ ரூ.20-க்கு விற்ற வெண்டைக்காய் ரூ.40-க்கும், கிலோ ரூ.20-க்கு விற்ற அவரைக்காய் ரூ.60-க்கும், கிலோ ரூ.7-க்கு விற்ற முட்டை கோஸ் ரூ.15-க்கும், ஒரு கிலோ ரூ.15-க்கு விற்ற வெள்ளரிக்காய் ரூ.30-க்கும், ரூ.10க்கு விற்ற காலிஃபிளவர் ஒன்று ரூ.40-க்கும் விற்கப்பட்டு வருகிறது.