கன்னியாகுமரி
மின்தடையால் தூத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் நோயாளிகள் கடும் அவதி
|மின்தடையால் தூத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்த நோயாளிகள் கடும் அவதிக்குள்ளானார்கள்.
கொல்லங்கோடு:
மின்தடையால் தூத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்த நோயாளிகள் கடும் அவதிக்குள்ளானார்கள்.
அரசு ஆஸ்பத்திரி
கொல்லங்கோடு அருகே தூத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் அரசு மேம்படுத்தப்பட்ட ஆஸ்பத்திரி செயல்பட்டு வருகிறது. இங்கு தினமும் நூற்றுக்கணக்கான மீனவ மக்கள் மற்றும் கரையோர பகுதி மக்கள் மருத்துவ தேவைக்காக வந்து செல்கின்றனர்.
மேலும் ஏராளமான கர்ப்பிணி பெண்களும் இங்கு வந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இவ்வாறு வரும் நோயாளிகளுக்கு இ.சி.ஜி., ரத்தம் உள்ளிட்ட பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு மருந்துகள் வழங்கப்படுகிறது. உள்நோயாளிகளும் தங்கியிருந்து சிகிச்சை பெற்று செல்கிறார்கள்.
மின்தடை
அதன்படி நேற்று காலையில் இருந்து ஏராளமானோர் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு வந்தனர். ஆனால் அந்த பகுதியில் மின்தடை அறிவிக்கப்பட்டிருந்ததால் அரசு ஆஸ்பத்திரியிலும் மின்சாரம் தடை செய்யப்பட்டிருந்தது.
இதனால் அவசர சிகிச்சை மற்றும் பரிசோதனைக்கு வந்த நோயாளிகளை ஆஸ்பத்திரியில் மின்சாரம் இல்லை என கூறி திருப்பி அனுப்பியுள்ளனர். அப்போது நோயாளிகள் ஜெனரேட்டரை பயன்படுத்த வேண்டியது தானே என கேள்வி எழுப்ப அதற்கு அங்கு பணியில் இருந்தவர்கள் ஜெனரேட்டர் இருக்கிறது, ஆனால் அதை இயக்க தேவையான டீசல் இல்லை என்று கூறினர்.
டீசலை வாங்குவதற்கு நிதி எதுவும் வழங்கப்படுவது இல்லை என்றனர். இதனால் சிகிச்சைக்கு வந்த நோயாளிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
நோயாளிகள் அவதி
மேலும் உள் நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டிருந்தவர்கள் மின்விசிறி ஓடாததால் காற்று கிடைக்காமல் கடும் அவதிக்குள்ளானார்கள். ஜெனரேட்டர் காட்சி பொருளாக ஆஸ்பத்திரியில் இருப்பது வேதனை அளிப்பதாக சமூக ஆர்வலர்களும் குற்றம்சாட்டினர்.
மேலும் இதுசம்பந்தமாக ஆஸ்பத்திரியில் அதிகாரிகள் ஆய்வு செய்து குறைகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.