< Back
மாநில செய்திகள்
சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீரை வெளியேற்றாததால்2-வது நாளாக பொதுமக்கள் சாலை மறியல் :வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் போக்குவரத்து பாதிப்பு
தேனி
மாநில செய்திகள்

சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீரை வெளியேற்றாததால்2-வது நாளாக பொதுமக்கள் சாலை மறியல் :வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் போக்குவரத்து பாதிப்பு

தினத்தந்தி
|
2 Jun 2023 12:15 AM IST

ஆண்டிப்பட்டியில் ரெயில்வே சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீரை வெளியேற்றாததால் 2-வது நாளாக பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சுரங்கப்பாதையில் மழைநீர்

ஆண்டிப்பட்டி பகுதியில் நேற்று முன்தினம் மாலை இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் ஆண்டிப்பட்டி-தெப்பம்பட்டி சாலையில் உள்ள ரெயில்வே சுரங்கப்பாதையில் தண்ணீர் குளம்போல் தேங்கியதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதன் காரணமாக வாகனங்களில் செல்ல முடியாமல் பொதுமக்கள் தவித்தனர். நீண்ட நேரம் அங்கேயே காத்திருந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள் சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீரை வெளியேற்றக்கோரி தேனி-மதுரை நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சுரங்கப்பாதையில் தேங்கியுள்ள தண்ணீரை அகற்றி உடனடியாக போக்குவரத்தை தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

சாலை மறியல்

இந்த நிலையில் நேற்று காலை வரை சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீரை வெளியேற்றவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் மீண்டும் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் சாலையின் குறுக்கே ஆட்டோக்களை நிறுத்தி போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதன்காரணமாக ஆண்டிப்பட்டி-தெப்பம்பட்டி சாலையில் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. இந்த மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது சுரங்கப்பாதையில் தேங்கிய தண்ணீரை வெளியேற்றுவதோடு, இனிவரும் காலங்களில் மழைநீர் தேங்காதவாறு தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தினர். இதையடுத்து பாலத்தில் தேங்கிய தண்ணீரை அப்புறப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். இதைத்தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்