தேனி
விபத்து இழப்பீடு வழங்காததால்மேலும் ஒரு அரசு பஸ் ஜப்தி
|தேனியில் விபத்து இழப்பீடு வழங்காததால் மேலும் ஒரு அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது.
கூடலூர் அருகே லோயர்கேம்ப் மின்வாரிய குடியிருப்பில் வசித்து வருபவர் ஆறுமுகம் (வயது 52). இவர், மின்வாரியத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். கடந்த 2015-ம் ஆண்டு இவர் ஒரு மோட்டார் சைக்கிளில் தனது மனைவி ஜெயந்தி (42), மகன் ஜான் (18) ஆகியோருடன் தேனி-கம்பம் சாலையில் பழனிசெட்டிபட்டி பகுதியில் சென்ற போது, பின்னால் வந்த அரசு பஸ் மோதியது. இந்த விபத்தில் ஆறுமுகம், ஜெயந்தி ஆகியோர் படுகாயம் அடந்தனர். ஜான் லேசான காயத்துடன் தப்பினார். இதில் ஆறுமுகம் கோமா நிலைக்கு சென்றார்.
இந்த விபத்தில் பாதிக்கப்பட்ட ஆறுமுகத்துக்கு ரூ.35 லட்சம், ஜெயந்திக்கு ரூ.4½ லட்சம் என இழப்பீடு வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்துக்கு தேனி மாவட்ட தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு உத்தரவிட்டது. ஆனால் இழப்பீடு வழங்காததால் கோர்ட்டில் நிறைவேற்றுதல் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதையடுத்து 4 அரசு பஸ்களை ஜப்தி செய்ய கோர்ட்டு உத்தரவிட்டது. கோர்ட்டு உத்தரவுப்படி கடந்த 6-ந்தேதி ஒரு அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது. அதன்பிறகும் இழப்பீடு வழங்காததால் மேலும் ஒரு பஸ்சை ஜப்தி செய்ய கோர்ட்டு பணியாளர்கள் நேற்று தேனி புதிய பஸ் நிலையத்துக்கு வந்தனர். அவர்கள் அங்கிருந்து மதுரைக்கு புறப்பட இருந்த அரசு பஸ்சை ஜப்தி செய்தனர். ஜப்தி செய்யப்பட்ட அந்த பஸ் தேனி மாவட்ட ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.