திருச்சி
அய்யன் வாய்க்காலில் தண்ணீர் வராததால் நடவு பணிகள் பாதிப்பு
|அய்யன் வாய்க்காலில் தண்ணீர் வராததால் நடவு பணிகள் பாதிக்கப்பட்டன.
ஜீயபுரம்:
குறுவை சாகுபடி
பெட்டவாய்த்தலை பகுதியில் இருந்து அய்யன் வாய்க்கால் பிரிந்து சிறுகமணி, பெருகமணி, திருப்பராய்த்துறை, எலமனூர் வரை செல்கிறது. இந்த பகுதியில் செல்லக்கூடிய வாய்க்கால் மூலம் சுமார் ஆயிரத்துக்கு மேற்பட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. அந்த பகுதியில் நெல், வாழை, கரும்பு போன்ற பயிர்கள் பயிரிடப்பட்டு வருகின்றன.
தற்போது குறுவை சாகுபடி பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த பகுதியில் உள்ள பெருகமணி மீனாட்சிபுரம் பகுதியில் செல்லக்கூடிய அய்யன் வாய்க்காலில் தண்ணீர் வரவில்லை. இதனால் அந்த பகுதியில் நாற்றங்காலில் வளர்ந்துள்ள நாற்றுகள் காய்ந்து விடும் நிலையில் உள்ளதால், விவசாயிகள் மிகுந்த மன வேதனையும், கவலையும் அடைந்துள்ளனர்.
கோரிக்கை
ஒரு சிலர் ஆழ்குழாய் கிணறு அமைத்திருப்பதால், அதன் மூலம் ஆயில் மோட்டார் வைத்து தண்ணீரை இறைத்து கொள்கின்றனர். ஆனால் ஆழ்குழாய் கிணறு இல்லாமல், பாசன வாய்க்கால் மூலம் பயன்பெறக்கூடிய விவசாயிகள் தண்ணீரை இரவல் கேட்டு, நாற்றங்கால்களுக்கு தண்ணீர் விடுகின்றனர். இருப்பினும் தொடர்ந்து இந்த வாய்க்காலில் தண்ணீர் வராததால் நடவு பணிகள் பாதிக்கப்படுகிறது. இது பற்றி பொதுப்பணித்துறை அதிகாரியிடம் கேட்டபோது, எங்களுடைய எல்லைக்கு உட்பட்ட வாய்க்காலானது பெருகமணியில் உள்ள 3 கட்டை பகுதியில் முடிகிறது. அதற்கு பின்னர் அந்த வாய்க்கால் யாருடைய கட்டுப்பாட்டில் உள்ளது என்று தெரியவில்லை என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது. எனவே இப்பகுதி விவசாயிகளின் நலன் கருதி உடனடியாக மீனாட்சிபுரம் பகுதியில் உள்ள அய்யன் வாய்க்காலில் தண்ணீர் விடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.