< Back
மாநில செய்திகள்
பருவமழை காரணமாக சென்னையில் 501 கழிவுநீர் வாகனங்கள் மூலம் மழைநீர் அகற்றம் - குடிநீர் வாரியம் அதிரடி நடவடிக்கை
சென்னை
மாநில செய்திகள்

பருவமழை காரணமாக சென்னையில் 501 கழிவுநீர் வாகனங்கள் மூலம் மழைநீர் அகற்றம் - குடிநீர் வாரியம் அதிரடி நடவடிக்கை

தினத்தந்தி
|
6 Nov 2022 9:56 AM IST

சென்னை குடிநீர் வாரியத்தின் சார்பில், 501 கழிவுநீர் வாகனங்கள் மூலம் மழைநீர் மற்றும் கழிவுநீர் அகற்றும் பணிகள் நடந்து வருகிறது.

தமிழகத்தில் பருவமழை தீவிரமானதை தொடர்ந்து சென்னை குடிநீர் வாரியத்தின் மூலம் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குடியிருப்பு பகுதிகள், சாலைகள், தாழ்வான பகுதிகள் மற்றும் பொதுவெளிகளில் தேங்கியுள்ள மழை நீரினை அகற்றும் பணிகள் நடந்து வருகிறது.

மழைநீர் அகற்றும் பணிகளில் 57 எண்ணிக்கையிலான நீர் உறிஞ்சும் வாகனங்கள், கழிவுநீர் செல்லக்கூடிய பிரதான குழாய்களில் ஏற்படும் அடைப்புகளை 162 ஜெட்ராடிங் எந்திரங்கள் மூலம் சரி செய்யப்படுகிறது. குடியிருப்பு பகுதிகளிலிருந்து வெளியேறும் கழிவுநீர் குழாய் இணைப்புகளில் ஏற்படும் அடைப்புகளை சரி செய்ய 282 தூர்வாரும் ஆட்டோக்கள் பயன்படுத்தப்படுகிறது. 501 கழிவுநீர் எந்திரங்கள் வாகனங்கள் மழைநீர் மற்றும் கழிவுநீர் அகற்றும் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு வருகிறது.

கழிவுநீர், குடிநீர் குழாய்களில் கலக்காமல் இருப்பதற்கான முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. கழிவுநீர் செல்லும் பிரதான குழாய்களில் தூர்வாரி பராமரிப்பு பணிகள் கடந்த 3 மாதமாக நடந்து வந்த நிலையில், தற்போது அடைப்பு ஏதும் இல்லாத நிலை உள்ளது.

அனைத்து பகுதிகளிலும் தொடர் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 044-45674567 (20 இணைப்புகள்) மற்றும் கட்டணமில்லா தொலைபேசி எண்.1916 என்ற எண்களில் தொடர்பு கொண்டு மழைநீர் மற்றும் கழிவுநீர் தொடர்பான புகார் மற்றும் குறைபாடுகளை பொதுமக்கள் தெரிவிக்கலாம்.

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள 321 கழிவுநீர் நீரேற்று நிலையங்கள் மூலம் கழிவுநீர் உறிஞ்சப்பட்டு 5 கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மூலம் சுத்திகரிப்பு பணிகள் செய்யப்படுகிறது. பருவமழைக்கு முன்னதாக நாள் ஒன்றுக்கு சராசரியாக 640 மில்லியன் லிட்டர் அளவிலான கழிவுநீர் உறிஞ்சப்பட்டு சுத்திகரிப்பு பணிகள் நடந்து வந்தது.

ஆனால், பருவமழை முன்னிட்டு நாள் ஒன்றுக்கு தற்போது 750 மில்லியன் லிட்டர் வரையிலான கழிவுநீர் சுத்திகரிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்தப்பணிகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட களப்பணியாளர்கள் 24 மணி நேரமும் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்