திருவாரூர்
புதுப்பாண்டி ஆற்றில் தண்ணீர் வராததால் சம்பா நெற்பயிர்கள் கருகின
|திருத்துறைப்பூண்டி அருகே புதுப்பாண்டி ஆற்றில் தண்ணீர் வராததால் சம்பா நெற்பயிர்கள் கருகியதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
ஆலத்தம்பாடி:
திருத்துறைப்பூண்டி அருகே புதுப்பாண்டி ஆற்றில் தண்ணீர் வராததால் சம்பா நெற்பயிர்கள் கருகியதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
புதுப்பாண்டி ஆறு
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கிராமங்களுக்கு புதுப்பாண்டி ஆற்றில் நீர்வரத்து இல்லாத காரணத்தால் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் இளம் சம்பா நெற்பயிர்கள் கருகி வருகின்றன. திருத்துறைப்பூண்டி அருகே நாணலூரில் கோரையாற்றில் இருந்து புதுப்பாண்டி ஆறு பிரிகிறது. இந்த ஆறு மூலம் வங்கநகர், வெள்ளங்கால், ஓவரூர், இளநகர், பாண்டிக்கோட்டகம், குன்னலூர், மாங்குடி, மருதவனம், வேப்பஞ்சேரி மற்றும் அதனை சுற்றி உள்ள கிராமங்களில் 5 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
சம்பா சாகுபடி
இந்த ஆண்டு முன்னதாகவே மே மாதம் 24-ந்தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இதை தொடர்ந்து மழை பெய்ததால் ஆறுகளில் தண்ணீர் குறைக்கப்பட்டது. இதனால் புதுப்பாண்டி ஆற்றுக்கு தண்ணீர் விடவில்லை. இதன் காரணமாக குறுவை சாகுபடியை விவசாயிகள் மேற்கொள்ளவில்லை.
இதையடுத்து விவசாயிகள் சம்பா சாகுபடி பணியை தொடங்கி ஈடுபட்டு வருகின்றனர். தற்போது நேரடி நெல் விதைப்பு முறையில் ஈடுபட்டு வருகின்றனர்.
பழுதடைந்த சட்ரஸ்
நெற்பயிர்கள் 30 நாட்கள் வயதுடைய நிலையில் உள்ளன. மீனம்ப நல்லூரில் உள்ள சாலுவனாறு தடுப்பணை பழுதடைந்து காணப்பட்டது.
தடுப்பணை கதவுகள், சட்ரஸ், ரெகுலேட்டர்கள் பழுதடைந்துள்ளது. வடிகால் வாய்க்கால் முறையாக தூர்வாராததால் விவசாயிகளே தங்கள் சொந்த செலவில் தூர்வாரினர். ஆனால் இந்த வாய்க்காலில் தண்ணீர் திறந்து விடவில்லை.
தண்ணீர் இன்றி நெற்பயிர்கள் கருகின
மேட்டூர் அணை முன்னதாகவே திறக்கப்பட்டும் கடைமடை பகுதியான புதுப்பாண்டி ஆற்றுக்கு தண்ணீர் வரவில்லை. இதனால் தண்ணீர் இன்றி வயல்களில் வெடிப்புகள் ஏற்பட்டு, நெற்பயிர்கள் கருகி வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
எனவே புதுப்பாண்டி ஆற்றில் தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.