தேனி
மழைப்பொழிவு இல்லாததால்முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் குறைந்தது:விவசாயிகள் கவலை
|மழைப்பொழிவு இல்லாததால் முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் குறைந்து வருகிறது.
தமிழக-கேரள எல்லையில் முல்லைப்பெரியாறு அணை அமைந்துள்ளது. தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட மக்களின் பாசனம் மற்றும் குடிநீர் ஆதாரமாக இந்த அணை விளங்குகிறது. அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த மாதத்திற்கு முன்பு வரை சாரல் மழை பெய்து வந்தது. இதன் காரணமாக அணைக்கு நீர் வரத்து அதிகரித்தது. அதன்படி அணையின் நீர்மட்டம் கடந்த மாதம் 31-ந் தேதி 121.60 அடியாக இருந்தது.
இந்நிலையில் தற்போது கடந்த சில வாரங்களாக அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்யவில்லை. இதனால் அணையின் நீர்மட்டம் படிப்படியாக குறைந்து வருகிறது. அணையின் நேற்றைய நீர்மட்டம் 119.50 அடியாக குறைந்து உள்ளது. நீர்வரத்து வினாடிக்கு 83 கன அடியாகவும், நீர் வெளியேற்றம் அணையில் இருந்து வினாடிக்கு 400 கன அடியாகவும் உள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்யாததால் கம்பம் பள்ளத்தாக்கு பகுதி விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.