கோயம்புத்தூர்
மின்கட்டணம், வாடகை உயர்வு காரணமாகபாக்கு தட்டு தயாரிக்கும் தொழில் பாதிப்பு-மானியம் வழங்க தொழிலாளர்கள் கோரிக்கை
|மின்கட்டண உயர்வு, வாடகை உயர்வு காரணமாக பாக்கு தட்டு தயாரிக்கும் தொழில் பாதிக்கப்பட்டு உள்ளது. அதனால் மின்சாரத்தில் மானியம் வழங்க தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்து உள்ளார்கள்.
ஆனைமலை
மின்கட்டண உயர்வு, வாடகை உயர்வு காரணமாக பாக்கு தட்டு தயாரிக்கும் தொழில் பாதிக்கப்பட்டு உள்ளது. அதனால் மின்சாரத்தில் மானியம் வழங்க தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்து உள்ளார்கள்.
சிறு, குறு தொழிற்சாலைகள்
ஆனைமலை ஒன்றியத்தில் நெல், தென்னை, பந்தல் விவசாயம் பிரதானமாக உள்ளது. இதில் 5,400 ஏக்கர் நெல் விவசாயமும், ஆயிரம் ஏக்கர் பந்தல் விவசாயமும், 23 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவில் தென்னை விவசாயம் நடைபெறுகிறது. சர்க்கார்பதி, சேத்துமடை, காளியாபுரம், வேட்டைக்காரன் புதூர், ஒடைய குளம் போன்ற பகுதிகளில் தென்னை மரங்களுக்கு இடையில் ஊடுபயிராக எண்ணற்ற பாக்கு மரங்கள் வளர்க்கப்படுகிறது.
இது பாக்கு காய்களை 4 மாதங்களுக்கு ஒருமுறை அறுவடை செய்து வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. மேலும் அதிலிருந்து பெறப்படும் பாக்கு மட்டைகளை ஆனைமலை சுற்றி உள்ள சிறு, குறு தொழிற்சாலைகளுக்கு பாக்கு தட்டு தயாரிக்கப்படுகிறது.
குறிப்பாக கோடை மற்றும் வெயில் காலங்களில் அதிக அளவு பாக்கு மட்டைகள் உதிர்ந்து கிடைக்கின்றன. பிளாஸ்டிக் கவர், பிளாஸ்டிக்தட்டு உள்ளிட்ட பொருட்கள் தமிழக அரசு தடை செய்யப்பட்ட பிறகு பாக்கு தட்டுகளுக்கு வரவேற்பு அதிகரித்துள்ளது. பொதுமக்கள் சுப நிகழ்ச்சிகளுக்கும், கோவில் திருவிழாக்களுக்கு ஏராளமானோர் வாங்கி செல்கின்றனர்.
விலை உயர்வு
இந்தநிலையில் மின்சார கட்டணம் உயர்வு, ஆட்கள் பற்றாக்குறை, பெட்ரோல், டீசல் விலை உயர்வு, விலைவாசி உயர்வு காரணமாக பெரும்பாலானோர் பாக்கு தட்டு தயாரிக்கும் பணியை கைவிட்டு உள்ளனர். இது குறித்து பாக்கு மட்டை தயாரிக்கும் தொழிலாளர்கள் கூறியதாவது:-
சேத்துமடை, சரளபதி, சர்கார்பதி, ஆழியார் உள்ளிட்ட பகுதியில் இருந்து ஒரு மட்டை 3 ரூபாய் 50. காசுகளுக்கு பெற்று சரக்கு வாகனங்கள் மூலம் ஏற்றி வரப்படுகிறது.ஒரு மட்டையிலிருந்து இரண்டு பாக்கு தட்டுகள் மட்டுமே தயாரிக்க இயலும்.பாக்கு மட்டையை காய வைத்து, ஒரு மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து.
மானியம் வழங்கப்படுமா?
மட்டை உலர்ந்த பிறகு இயந்திரத்தைக் கொண்டு அழுத்தம் கொடுத்து பாக்கு தட்டு தயாரிக்கப்படுகிறது. அதில் மூன்று ரகமாக தயாரிக்கப்படுகிறது 8 செ.மீ அகலம் உடைய தட்டு 4 ரூபாய்க்கும், 10 செ.மீ அகலம் உடைய தட்டு 5 ரூபாய்க்கும், 12 செ.மீ அகலம் உடைய தட்டு 6 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு யூனிட் மின்சாரம் 4 ரூபாய் 50 காசுகள் இருந்தது. தற்போது ஒரு யூனிட் 7 ரூபாய் 50 காசுகளுக்கு விநியோகிக்கப்படுகிறது. மின் கட்டணம் இரட்டிப்பாக உயர்ந்துள்ளதால் பாக்கு மட்டை தயாரிக்கும் ஏராளமான சிறு குறு தொழிலாளர்கள் தொழிற்சாலைகளை மூடியுள்ளனர். ஆள் கூலி, வண்டி வாடகை, மின் கட்டணம் போன்றவற்றிற்கு ஒரு மட்டைக்கு ரூ.3.50 காசுகள் வரை செலவாகிறது. தினசரி 500 முதல் 1000 மட்டைகள் தயார் செய்யலாம். இதன் மூலம் 500 ரூபாய் லாபமாக கிடைக்கிறது. எனவே பாக்கு தட்டு தயாரிக்கும் தொழிலாளர்களுக்கு மின் கட்டணத்தில் மானியம் வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.