தஞ்சாவூர்
தொடர்மழையால் அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் நீரில் மூழ்கி முளைத்தன
|தொடர்மழையால் அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் நீரில் மூழ்கி முளைத்தன
தஞ்சை மாவட்டத்தில் தொடர் மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கி முளைக்க தொடங்கி உள்ளன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
நெற்களஞ்சியம்
தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சை மாவட்டத்தில் குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி நடைபெறும். இதற்காக ஒவ்வொரு ஆண்டும் மேட்டூர் அணையில் இருந்து ஜூன் மாதம் 12-ந்தேதி தண்ணீர் திறக்கப்படும்.
ஆனால் இந்தஆண்டு முன்கூட்டிய மே மாதத்தில் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதால் குறுவை சாகுபடி நிர்ணயிக்கப்பட்ட இலக்கை தாண்டி அதிக அளவில் நடைபெற்றது. இதில் தற்போது முன்பட்ட குறுவை அறுவடை தொடங்கி நடைபெற்று வருகிறது.
மழையால் சாய்ந்தன
தஞ்சை, ஒரத்தநாடு, பாபநாசம், அம்மாப்பேட்டை, திருவையாறு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தன. இந்த நிலையில் பருவநிலை மாற்றம் காரணமாக தஞ்சை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகின்றன. விட்டு, விட்டு மழை பெய்து வருவதால் நெல் அறுவடை பணிகள் தாமதம் ஆகின. பல இடங்களில் நேரடி நெல் விதைப்பு செய்யப்பட்டஇடங்களிலும் மழைநீர் தேங்கி காணப்பட்டதால் பாதிப்பு ஏற்பட்டது.
இந்தநிலையில்கடந்த 2 நாட்களாக தஞ்சை மாவட்டத்தில் தொடர்ந்துமழை பெய்து வருவதால் வயல்களில் மழைநீர் தேங்கி காணப்படுகிறது. நேற்று காலை 8 மணி முதல் தொடர்ந்து மழை தூறிக்கொண்டே இருந்தது. இந்த மழை காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் சாய்ந்தன.
நெல்மணிகள் முளைத்தன
மேலும் மழைநீர் தேங்கியதால் சாய்ந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கி காணப்பட்டன. தஞ்சை மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக பிரந்தை, கீழகளக்குடி, மேலகளக்குடி, ஆலங்குடி, கொத்தங்குடி, அன்னத்தோட்டம், புலவர்நத்தம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் குறுவைசாகுபடி செய்த நெற்பயிர்கள் ஆயிரம் ஏக்கருக்கு மேல் அறுவடைக்கு தயாராக இருந்தது.
இந்த நெற்பயிர்கள் மழையால் பல ஏக்கர்களில் சாய்ந்து, வயல்களில் மழைநீர் தேங்கி உள்ளதால் முளைக்கத் தொடங்கி விட்டன. மேலும் தொடர்ந்து தண்ணீர் தேங்கி நிற்பதாலும், வடிவதற்கு தாமதம்ஆவதால் விவசாயிகள் வேதனையுடன் காணப்படுகின்றனர்.
நெல் குவியல்கள்
வடிகால்களை முறையாக தூர்வாராததால் தண்ணீர் வடிவதற்கு தாமதம் ஆகின்றன. இதனால் தான் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் அறுவடை செய்த நெல்லை, கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படாததால் விவசாயிகள் சாலையோரத்தில் குவியல், குவியலாக குவித்து வைத்து தார்ப்பாய், சாக்குப்பைகள்கொண்டு மூடி பாதுகாத்து வருகிறார்கள்.
மேலும் நேரடி கொள்முதல் நிலையங்களில் ஈரப்பதம் பார்க்காமல் விரைந்து கொள்முதல் செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இயல்பு வாழ்க்கை பாதிப்பு
இந்த மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை அடியோடு பாதிக்கப்பட்டது. இந்த மழையினால் கூலி வேலைக்கு செல்வோர், அலுவலகத்துக்கு செல்வோர் கடும் அவதிக்குள்ளாகினர். தஞ்சை மாவட்டத்தில் நேற்று மழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உத்தரவிட்டார். ஆனால் இந்த அறிவிப்பு தெரியாமல் பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் காலை நேரத்தில் வழக்கம் போல புறப்பட்டு பள்ளிக்கு சென்றனர். ஆனால் பள்ளி சென்ற பின்னர் விடுமுறை என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் மழையில் நனைந்தபடி வீடு திரும்பினர்.
2 குடிசைகள் இடிந்தன
நேற்று மழை மதியம் 2 மணி வரை நீடித்தது. அதன் பின்னர் மழை இன்றி காணப்பட்டது. இருப்பினும் வானம் மேகமூட்டத்துடன் காட்சி அளித்தது. இந்த மழையினால் தரைக்கடை வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். தஞ்சை மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக 2 குடிசை வீடுகள் இடிந்து விழுந்தன.
தஞ்சை மாவட்டத்தில் நேற்று காலை 7 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
மதுக்கூர் 40, பாபநாசம் 39, ஈச்சன்விடுதி 30, கும்பகோணம் 29, திருவிடைமருதூர் 26, அய்யம்பேட்டை 26, திருவிடைமருதூர் 25, நெய்வாசல் தென்பாதி 19, அணைக்கரை 18, பட்டுக்கோட்டை 17, வல்லம் 16, பேராவூரணி 12, வெட்டிக்காடு 9, மஞ்சளாறு 9, குருங்குளம் 7, திருவையாறு 6, தஞ்சை 6, பூதலூர் 3, திருக்காட்டுப்பள்ளி 3, கல்லணை 3, அதிராம்பட்டினம் 1.