திருவாரூர் மாவட்டத்தில் கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
|திருவாரூர் மாவட்டத்தில் நேற்று இரவு முதல் மழை வெளுத்து வாங்கி வருகிறது.
திருவாரூர்,
குமரிக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி, தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்துவருகிறது.
இதற்கிடையில், திருவாரூர் மாவட்டத்தில் நேற்று இரவு முதல் மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இந்த நிலையில் கனமழை காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அதேபோல, புதுச்சேரிக்கு உட்பட்ட காரைக்கால் மாவட்டத்தில் கனமழை காரணமாக அனைத்து பள்ளிகளுக்கும் இன்று ஒரு நாள் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் உத்தரவிட்டுள்ளார். கல்லூரிகள் வழக்கம்போல் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.