கனமழை வெள்ளத்தால் தத்தளிக்கும் தென் மாவட்டங்கள்... ஆம்னி பேருந்து சேவைகள் ரத்து...!
|நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் பலத்த மழைபெய்து சாலைகளில் வெள்ளநீர் தேங்கியுள்ளது.
சென்னை,
குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் பலத்த மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருந்தது. அதன்படி 4 மாவட்டங்களிலும் நேற்று முன்தினம் இரவு முதல் பரவலாக கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில் தென்மாவட்டங்களுக்கு செல்லும் ஆம்னி பேருந்துகள் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளதாவது,
நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் பலத்த மழைபெய்து சாலைகளில் வெள்ளநீர் தேங்கியுள்ளதால் பேருந்தை இயக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தென் மாவட்டங்களுக்கு ஆம்னி பேருந்துகள் இயக்கப்படாது. மழை, வெள்ள பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களுக்கு பேருந்துகளை இயக்குவது பாதுகாப்பு இல்லை என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும், மழை வெள்ளம் குறைந்த பின் மீண்டும் பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த 4 மாவட்டங்களுக்கும் தினசரி 300 பேருந்துகள் இயக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது வெள்ளம் காரணமாக தற்காலிகமாக பேருந்துகள் ரத்து செய்யப்படுகின்றன.