< Back
மாநில செய்திகள்
தொடர் மழைக்கு சுவர் இடிந்து வீடுகள் சேதம்
கோயம்புத்தூர்
மாநில செய்திகள்

தொடர் மழைக்கு சுவர் இடிந்து வீடுகள் சேதம்

தினத்தந்தி
|
9 July 2023 7:30 PM GMT

வால்பாறையில் தொடர் மழைக்கு சுவர் இடிந்து வீடுகள் சேதம் அடைந்தன.

வால்பாறை

வால்பாறையில் தொடர் மழைக்கு சுவர் இடிந்து வீடுகள் சேதம் அடைந்தன.

ஒரே நாளில் 6 அடி

வால்பாறை பகுதியில் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. இந்த மழை பகலில் குறைவாகவும், இரவில் அதிகமாகவும் பெய்கிறது. மேல்நீராறு அணையை ஒட்டியுள்ள வனப்பகுதிகளில் அவ்வப்போது கனமழை பெய்வதால், நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இதனால் மேல்நீராறு அணையில் இருந்து 1,582 கன அடி நீர் வெள்ளமலை எஸ்டேட் டனல் வழியாக சோலையாறு அணைக்கு கொண்டு செல்லப்படுகிறது. இதனால் 160 அடி கொள்ளளவு கொண்ட சோலையாறு அணையின் நீர்மட்டம் நேற்று ஒரே நாளில் 6 அடி உயர்ந்து 84 அடியை தாண்டியது. நேற்று முன்தினம் நீர்மட்டம் 78 அடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த தண்ணீர் மின் உற்பத்தி செய்வதற்கு போதுமானதாக இல்லாத நிலையில், மானாம்பள்ளி மின் நிலையத்தின் மாற்றுப்பாதை வழியாக பரம்பிக்குளம் அணைக்கு வெளியேற்றப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு இதே நாளில் சோலையாறு அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவான 160 அடியை தாண்டியது. ஆனால் தற்போது 84 அடியைதான் தாண்டியுள்ளது.

சுவர் இடிந்தது

இதற்கிடையில் மழை காரணமாக சோலையாறு அணை இடது கரையில் மாரிச்சாமி என்பவரது வீட்டின் பின்பகுதியில் மண் சரிவு ஏற்பட்டு சுவர் இடிந்து விழுந்தது. இதேபோன்று ஜே.ஜே.நகரில் சுந்தரம் என்பவரது வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது.

மேலும் வனப்பகுதியில் பெய்யும் மழை காரணமாக வரட்டுப்பாறை எஸ்டேட் பகுதியில் உள்ள தடுப்பணை நிரம்பி வழிகிறது. அங்கு தண்ணீர் அருவியாக கொட்டி வருகிறது. வருகிற நாட்களில் தென்மேற்கு பருவமழை இன்னும் தீவிரம் அடைந்தால் மட்டுமே சோலையாறு அணையில் மின் உற்பத்தி தொடங்குவதற்கும், அதன் மூலம் சமவெளி பகுதியில் உள்ள அணைகளுக்கு தண்ணீரை கொண்டு செல்வதற்கும், ஒப்பந்தப்படி கேரளாவிற்கு கொடுக்க வேண்டிய தண்ணீரை கொடுப்பதற்குமான சூழ்நிலை உருவாகும் என்று நீர் வள ஆதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்