திருவள்ளூர்
திருவள்ளூர் மாவட்டத்தில் 2 நாட்களாக பெய்த மழையால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர்மட்டம் உயர்வு
|திருவள்ளூர் மாவட்டத்தில் 2 நாட்களாக பெய்த மழையால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக இருக்கும் நீர்த்தேக்கங்களில் நேற்று முன்தினம் மாலை முதல் விட்டு விட்டு இரவு முழுவதும் விடிய விடிய மழை கொட்டி தீர்த்தது. இதனால் திருவள்ளூரில் உள்ள ஏரிகளில் நீர்இருப்பு கூடி இருப்பதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனால் சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக இருக்கும் பூண்டி சத்தியமூர்த்தி சாகர் நீர்த்தேக்கத்தின் மொத்த கொள்ளளவான 3231 மில்லியன் கனஅடியில் தற்போது 1700 மில்லியன் கனஅடி நீர் இருப்பு உள்ளது. நீர்த்தேக்கத்திற்கு ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையிலிருந்து 200 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக பேபி கால்வாய் மூலமாக 70 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
புழல் ஏரியின் மொத்த கொள்ளளவான 3300 மில்லியன் கனஅடியில் தற்போது 1955 மில்லியன் கனஅடி நீர் உள்ளது. ஏரிக்கு 190 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக 189 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
சோழவரம் ஏரியின் மொத்த கொள்ளளவான 1081 மில்லியன் கனஅடியில் 107 மில்லியன் கனஅடி நீர் இருப்பு உள்ளது. ஏரிக்கு 22 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக 25 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவான 3645 மில்லியன் கனஅடியில் 2038 மில்லியன் கனஅடி நீர் இருப்பு உள்ளது. ஏரிக்கு பூண்டி நீர்த்தேக்கத்தில் இருந்து 622 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக 159 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
கண்ணன்கோட்டை - தேர்வாய் கண்டிகை ஏரியின் மொத்த கொள்ளளவான 500 மில்லியன் கனஅடியில் தற்போது 347 மில்லியன் கனஅடி நீர் இருப்பு உள்ளது. சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக 22 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.