திருவள்ளூர்
மதுபோதையில் கிணற்றில் தவறி விழுந்த பெயிண்டர் பலி
|திருவாலங்காடில் மதுபோதையில் கிணற்றில் தவறி விழுந்த பெயிண்டர் பரிதாபமாக பலியானார்.
திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு ஒன்றியம் தொழுதாவூர் அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் திலீப் (வயது 37). இவர் பெயிண்டர் வேலை செய்து வந்தார். இந்நிலையில் இவர் நேற்று அப்பகுதியில் உள்ள விவசாய கிணறு அருகே தனது நண்பர்கள் 3 பேருடன் சேர்ந்து மது அருந்திய போது, மதுபோதையில் கால் தடுமாறி கிணற்றில் விழுந்துள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் இது குறித்து தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பேரம்பாக்கம் நிலைய அலுவலர் வீரராகவன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் 2 மணி நேரம் போராடி கிணற்றிலிருந்து திலீப் உடலை மீட்டு திருவாலங்காடு போலீசாரிடம் ஒப்படைத்தனர். மீட்கப்பட்ட உடலை பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இதுகுறித்து திருவாலங்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதேபோல், திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா பொதட்டூர்பேட்டை நடுத்தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணன் (55).இவரது மனைவி வள்ளி (45). கிருஷ்ணன் எலக்ட்ரீசியன் வேலை செய்து வந்தார். கடந்த மாதம் மின் மோட்டார் பழுது பார்த்தபோது, கிணற்றில் தவறி விழுந்த நிலையில், சென்னை ராஜீவ்காந்தி அரசு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். சுமார் 45 நாட்களாக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்து இவர், நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக செத்தார். இந்த சம்பவம் குறித்து பொதட்டூர்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.