< Back
மாநில செய்திகள்
மது போதையில் மகள்-மகனுக்கு தோசை கரண்டியால் சூடு வைத்த கொத்தனார்
பெரம்பலூர்
மாநில செய்திகள்

மது போதையில் மகள்-மகனுக்கு தோசை கரண்டியால் சூடு வைத்த கொத்தனார்

தினத்தந்தி
|
6 Sept 2023 12:27 AM IST

மது போதையில் மகள்-மகனுக்கு தோசை கரண்டியால் கொத்தனார் சூடு வைத்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தோசை கரண்டியால் சூடு

பெரம்பலூர் அருகே கவுல்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் நடராஜன் (வயது 35), கொத்தனார். இவருக்கு சரஸ்வதி என்ற மனைவியும், புகழினி (10) என்ற மகளும், நித்திஷ் (8) என்ற மகனும் உள்ளனர். கவுல்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் புகழினி 5-ம் வகுப்பும், நித்திஷ் 3-ம் வகுப்பும் படித்து வருகின்றனர்.இவர்கள் 2 பேரும் நேற்று வழக்கம் போல் பள்ளிக்கு சென்றனர். ஆசிரியர் தினத்தையொட்டி பள்ளியில் ஆசிரியை ஒருவர் நித்திசுக்கு சாக்லேட் வழங்கும் போது, அவனது வலது கை மணிக்கட்டு அருகில் தீக்காயம் இருப்பதை கண்டு விசாரித்தார். அதற்கு நித்திஷ் தனது தந்தை மது போதையில் தனக்கும், அக்காள் புகழினிக்கும் கடந்த 2-ந்தேதி தோசை கரண்டியால் சூடு வைத்ததில், 2 பேருக்கு தீக்காயம் ஏற்பட்டதாகவும், இதனை தட்டி கேட்ட தனது தாயை தந்தை மத்துக்கட்டையால் தாக்கினார். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக யாரிடமும் கூறக்கூடாது என்று மிரட்டியதாக நாங்கள் இதுகுறித்து யாரிடம் கூறவில்லை என்று கூறினான்.

போலீசார் விசாரணை

இதையடுத்து அந்த ஆசிரியை இந்த சம்பவம் குறித்து பள்ளி தலைமை ஆசிரியருக்கு தகவல் தெரிவித்தார். அவர் குழுந்தைகள் நலக்குழுவினருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் பள்ளிக்கு வந்த குழந்தைகள் நலக்குழு பணியாளர் வந்து நித்திஷிடம் விசாரணை நடத்தி, அவனுக்கு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை அளித்து குன்னத்தில் உள்ள காப்பகத்திலும், புகழினியை பெரம்பலூரில் உள்ள காப்பகத்திலும் சேர்த்துள்ளனர்.

புகழினிக்கு தீக்காயம் அதிகமாக இருந்ததால் அவர் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக பெரம்பலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
மேலும் செய்திகள்