சென்னை
குடிபோதையில் தந்தையை தாக்கிய என்ஜினீயரிங் பட்டதாரி தூக்குப்போட்டு தற்கொலை
|குடிபோதையில் தந்தையை தாக்கிய என்ஜினீயரிங் பட்டதாரி, தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சென்னை வில்லிவாக்கம் பஜனை கோவில் தெருவைச் சேர்ந்தவர் சீனு ராம். இவர், போட்டோ ஸ்டூடியோ வைத்துள்ளார். இவருடைய மகன் கார்த்திக் (வயது 28). என்ஜினீயரிங் பட்டதாரியான இவர், வேலைக்கு செல்லாமல் தினமும் குடிப்பதற்கு பணம் கேட்டு தந்தையிடம் தகராறு செய்து வந்தார்.
மேலும் குடித்துவிட்டு போதையில் வீட்டுக்கு வரும் கார்த்திக், தந்தை என்றும் பாராமல் சீனு ராமை அடித்து கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது.
நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்த கார்த்திக், தந்தை சீனு ராமை அடித்து உதைத்தார். பின்னர் கோபத்துடன் படுக்கை அறைக்குச் சென்று கதவை உள்பக்கமாக தாழ்ப்பாள் போட்டுக்கொண்ட கார்த்திக், தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுபற்றி தகவல் அறிந்து வந்த ஐ.சி.எப். போலீசார், தூக்கில் தொங்கிய கார்த்திக் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.