< Back
மாநில செய்திகள்
குடிபோதையில் தகராறு: கள்ளக்காதலனை மகளுடன் சேர்ந்து அடித்துக்கொன்ற கள்ளக்காதலி
மாநில செய்திகள்

குடிபோதையில் தகராறு: கள்ளக்காதலனை மகளுடன் சேர்ந்து அடித்துக்கொன்ற கள்ளக்காதலி

தினத்தந்தி
|
21 May 2024 7:55 AM IST

கள்ளக்காதலன் சுப்பிரமணியனுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது.

சேலம்,

சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே கஸ்தூரிபட்டி கிராமம் பெரிய பனங்காடு பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 42). இவருடைய மனைவி சரஸ்வதி. இவர்களுக்கு ஜீவிதா (22) என்ற மகளும், நிதிஷ் (19) என்ற மகனும் உள்ளனர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சரஸ்வதி இறந்து விட்டார். மகள் ஜீவிதாவுக்கு திருமணம் ஆகி விட்டது. நிதிஷ், தனது பெரியப்பா பாலகிருஷ்ணன் வீட்டில் தங்கி கல்லூரியில் படித்து வருகிறார்.

இதனால் வீட்டில் தனியாக இருந்த சுப்பிரமணியனுக்கு, சங்ககிரி அருகே மோரூர் பிட்-1 கிராமம் புள்ளிபாளையத்தை சேர்ந்த சுரேஷ் என்ற மெக்கானிக்கின் மனைவி கலைவாணி (35) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. கலைவாணி சங்ககிரி ஆர்.எஸ். பகுதியில் உள்ள மருந்து கடையில் வேலைபார்த்த போது, அங்கு வந்து சென்ற இடத்தில் அவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.

இதுபற்றி தெரியவந்ததும், சுரேஷ் மனைவியை கண்டித்துள்ளார். மகள் உள்ளதை குறிப்பிட்டு ஒழுக்கமாக இரு என்று கூறி மனைவியை கண்டித்துள்ளார். இதையடுத்து கலைவாணி தனது கணவர் குடும்பத்தினரை விட்டு பிரிந்து கடந்த 7 மாதங்களுக்கு முன்பு சுப்பிரமணியனுடன் சென்று விட்டார். அவர்கள் இருவரும் சங்ககிரி ஆர்.எஸ். புளியங்காயனூர் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து கணவன், மனைவியாக வாழ்ந்து வந்துள்ளனர்.

கள்ளக்காதலன் சுப்பிரமணியனுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. இதனால் அவர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு புளியங்காயனூரில் வசித்த வீட்டை காலி செய்து விட்டு பக்காளியூரில் ஒரு வாடகை வீட்டில் குடியேறினர்.

இதனிடையே கலைவாணியின் மகள் நித்யாஸ்ரீயும், தனது தாயாருடன் தங்கி கொள்ள விரும்பி அந்த வீட்டுக்கு வந்தார். நேற்று முன்தினம் கலைவாணியும், அவருடைய மகளும் வீட்டில் இருந்துள்ளனர்.

இரவு வீட்டுக்கு குடிபோதையில் வந்த சுப்பிரமணியனுக்கும், கலைவாணிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. நள்ளிரவு 1 மணியளவில் தகராறு முற்றிய நிலையில், கலைவாணியையும், அவருடைய மகள் நித்யாஸ்ரீயையும் சுப்பிரமணியன் அடித்து உதைத்ததாக கூறப்படுகிறது.

தன்னையும், மகளையும் கள்ளக்காதலன் அடித்து துன்புறுத்துகிறானே என்று ஆத்திரம் அடைந்த கலைவாணி ஒரு கட்டத்தில் வீட்டில் இருந்த மிளகாய் பொடியை கள்ளக்காதலனின் கண்ணில் தூவினார். பின்னர் அருகில் இருந்த இரும்பு கம்பியை (ராடு) எடுத்து கள்ளக்காதலனின் தலை மற்றும் நெற்றியில் ஓங்கி அடித்தார். இதில் பலத்த காயம் அடைந்து துடிதுடித்த சுப்பிரமணியன் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார்.

இதனால் செய்வதறியாது திகைத்த கலைவாணி அங்கிருந்து தனது மகளை கூட்டிக்கொண்டு தப்பிச்சென்று விட்டார். இதனிடையே நேற்று காலையில் சுப்பிரமணியனின் அண்ணன் பாலகிருஷ்ணன் தம்பியின் வீட்டுக்கு வந்தார். அங்கு ரத்த வெள்ளத்தில் அவர் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இது குறித்து சங்ககிரி போலீசுக்கு பாலகிருஷ்ணன் தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஜினி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சுப்பிரமணியனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த பயங்கர சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கள்ளக்காதலி கலைவாணியை கைது செய்தனர். கைதான கலைவாணியிடம் கள்ளக்காதலனை எதற்காக கொன்றார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கள்ளக்காதலனை, கள்ளக்காதலியே அடித்துக்கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்