< Back
மாநில செய்திகள்
குடிபோதையில் தகராறு: கர்ப்பிணி மனைவியை எரித்துக்கொன்ற வாலிபர்
செங்கல்பட்டு
மாநில செய்திகள்

குடிபோதையில் தகராறு: கர்ப்பிணி மனைவியை எரித்துக்கொன்ற வாலிபர்

தினத்தந்தி
|
13 Oct 2023 3:04 PM IST

மறைமலைநகர் அருகே கர்ப்பிணியை எரித்துக்கொன்ற கணவர் கைது செய்யப்பட்டார்.

தீ வைப்பு

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அடுத்த கோவிந்தாபுரம், வண்டி பாளையத்தம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 28). இவர் மறைமலைநகர் பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி நந்தினி (25). இவர்களுக்கு 6 வயதில் ஒரு மகன் உள்ளார். நந்தினி 4 மாத கர்ப்பிணியாக இருந்தார். இந்த நிலையில் ராஜ்குமார் நேற்று மதியம் மதுகுடித்து விட்டு வீட்டுக்கு வந்தார். இதனால் கணவன், மனைவி இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ராஜ்குமார் மனைவியை சரமாரியாக தாக்கி விட்டு மனைவி மீது மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்து விட்டு வெளியே தப்பி ஓடி வந்ததாக கூறப்படுகிறது.

சாவு

இதில் கர்ப்பிணியான நந்தினி உடலில் தீ எரிந்த நிலையில் அலறி அடித்துக்கொண்டு சாலைக்கு ஓடிவந்தார். நந்தினியின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர் அவரது உடலில் எரிந்து கொண்டிருந்த தீயை அணைக்க முயன்றனர். உடல் முழுவதும் தீ வேகமாக பரவியதால் அவரது உடல் முழுவதும் எரிந்த நிலையில் பலத்த காயத்துடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். உடனடியாக அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நந்தினி பரிதாபமாக இறந்தார்.

கைது

மனைவி மீது மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்து விட்டு தப்பி ஓடிய ராஜ்குமாரை கிராம மக்கள் பிடித்து தர்மஅடி கொடுத்து மறைமலைநகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் நடந்த சம்பவங்கள் பற்றி கிராம மக்கள் மற்றும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் விசாரித்தனர்.

இதுகுறித்து மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜ்குமாரை கைது செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்