குடிபோதையில் தகராறு... கொத்தனாரை கொன்று உடலை புதைத்த 2-வது மனைவி, மைத்துனர்
|மாரிமுத்துவின் வீட்டில் 3 பேரும் ஒன்றாக மது குடித்துள்ளனர்.
தஞ்சாவூர்,
தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் தாலுகா ஆடுதுறை அருகே உள்ள 69-சாத்தனூர் கிராமம் சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் துரை. இவருடைய மகன் மாரிமுத்து (வயது 29) கொத்தனார். இவருக்கும் அஞ்சலை என்பவருக்கும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக இவர்கள் பிரிந்து வாழ்ந்து வந்தனர்.
இந்த நிலையில் திருச்சி மாவட்டம் மணப்பாறையை சேர்ந்த பிரியாவுடன்(21) மாரிமுத்துவுக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து மாரிமுத்து, பிரியாவை 2-வது திருமணம் செய்து கொண்டு சாத்தனூர் கிராமத்தில் வசித்து வந்தார். குடிப்பழக்கம் உள்ள மாரிமுத்து மதுகுடித்து விட்டு பிரியாவிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.
கடந்த 6-ந் தேதி இரவு மாரிமுத்து, பிரியா மற்றும் மாரிமுத்துவின் முதல் மனைவி அஞ்சலையின் சகோதரர் ஆடுதுறையை சேர்ந்த மணிகண்டன்(24) ஆகிய 3 பேரும் ஒன்றாக மாரிமுத்துவின் வீட்டில் மது குடித்துள்ளனர். அப்போது மதுபோதையில் 3 பேருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த பிரியா மற்றும் மணிகண்டன் ஆகிய இருவரும் சோ்ந்து அருகில் கிடந்த அரிவாளை எடுத்து மாரிமுத்துவை சரமாரியாக வெட்டினர்.
இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த மாரிமுத்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனைத்தொடர்ந்து கொலையை மறைப்பதற்காக மாரிமுத்து வீட்டின் அருகே உள்ள ஒரு தோப்பில் மாரிமுத்துவின் உடலை குழி தோண்டி பிரியா மற்றும் மணிகண்டன் ஆகிய இருவரும் சேர்ந்து புதைத்துள்ளனர். இதையடுத்து மாரிமுத்துவின் தந்தை துரை தனது மகனை காணவில்லை என புகார் கொடுத்தார். புகாரின் பேரில் தலைமறைவாக இருந்த பிரியா மற்றும் மணிகண்டன் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் கொத்தனாரை மனைவியும், மைத்துனரும் சேர்ந்து கொலை செய்து உடலை புதைத்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.