< Back
மாநில செய்திகள்
குடிப்போதையில் தகராறு; உருட்டு கட்டையால் வாலிபர் அடித்துக்கொலை - உறவினர் கைது
செங்கல்பட்டு
மாநில செய்திகள்

குடிப்போதையில் தகராறு; உருட்டு கட்டையால் வாலிபர் அடித்துக்கொலை - உறவினர் கைது

தினத்தந்தி
|
5 Aug 2023 1:52 PM IST

குடிப்போதையில் ஏற்பட்ட தகராறில் வாலிபரை உருட்டு கட்டையால் அடித்துக்கொலை செய்த தங்கை கணவர் கைது செய்யப்பட்டார்.

செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கம் அடுத்த வாயலூர் ஐந்துகாணி பகுதியைச் சேர்ந்தவர் செல்லப்பன் (வயது 30). இவரது தங்கை கஸ்தூரியின் கணவர் முருகன் (32). கஸ்தூரி 2 வருடத்திற்கு முன்பு சாலை விபத்தில் பலியானார். இவர்களுக்கு 2 பிள்ளைகள் உள்ள நிலையில் அவர்கள் தாம்பரத்தில் உள்ள ஒரு காப்பகத்தில் சேர்க்கப்பட்டு உள்ளது.

செல்லப்பன் மற்றும் முருகன் கூலி வேலை செய்து வந்தனர். குடி பழக்கம் கொண்ட இருவரும் சேர்ந்து மது அருந்துவது வழக்கம். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு கல்பாக்கம்-புதுப்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள தனியார் கார் ஷோரூம் அருகே அமர்ந்து மது அருந்தி கொண்டு இருந்தனர். அப்போது இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறி உள்ளது.

குடி போதையில் இருந்த முருகன் ஆத்திரத்தில் செல்லப்பனை உருட்டு கட்டையால் தாக்கினார். இதில் செல்லப்பன் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். இதுகுறித்து வாயலூர் ஊராட்சி முன்னாள் தலைவர் அப்துல்உசேன் கொலை சம்பவம் குறித்து போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.

தகவல் அறிந்த கல்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரவீன்டோனி மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த செல்லப்பன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் கொலையை அரங்கேற்றிவிட்டு அங்கேயே குடிபோதையில் நிதானமின்றி படுத்து கிடந்த முருகனை போலீசார் கைது செய்தனர். இறந்த செல்லப்பனுக்கு மாரி என்ற மனைவியும், 3 ஆண் குழந்தைகள், 3 பெண் குழந்தைகள் என மொத்தம் 6 குழந்தைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்