மதுபோதையில் சித்ரவதை: கோபத்தில் கணவர் மீது வெந்நீர் ஊற்றிய மனைவி... அடுத்து நடந்த சோகம்
|லதா வீட்டு வேலைக்கு சென்று அதில் கிடைக்கும் பணத்தை கொண்டு பிள்ளைகளை படிக்க வைத்து வந்தார்.
குமரி,
குமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள குழிக்கோடு வண்டாவிளை பகுதியை சேர்ந்தவர் ஹரிதாஸ் (வயது 58), கொத்தனார். இவருக்கு லதா(48) என்ற மனைவியும், 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இதில் ஒரு மகள் நர்சிங் படித்து முடித்துள்ளார். ஹரிதாசுக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்துள்ளது.
இதனால் அவர் தினமும் மது குடித்து விட்டு மனைவியிடம் தகராறு செய்வதுடன் தகாத வார்த்தையால் பேசி அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். மேலும் ஹரிதாஸ் வீட்டு செலவுக்கு பணம் கொடுக்காததால் லதா வீட்டு வேலைக்கு சென்று அதில் கிடைக்கும் பணத்தை கொண்டு பிள்ளைகளை படிக்க வைத்து வந்தார்.
நர்சிங் படித்து முடித்த மூத்த மகள் வேலைக்கு சென்று விட்டால் குடும்பத்தின் சுமை கொஞ்சம் குறையும். அதேபோல் நர்சிங் படித்து வரும் 2-வது மகளுக்கும், பாலிடெக்னிக் முடித்த மகனுக்கும் வேலை கிடைத்து விட்டால் பிரச்சினை இருக்காது என நினைத்து லதா வாழ்க்கையை கழித்து வந்தார்.
ஆனாலும் கணவனின் செயலால் லதா நிம்மதி இழந்து தவித்து வந்தார். ஒரு கட்டத்தில் கணவனின் கொடுமை தாக்க முடியாமல் மகளிர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் ஹரிதாசை அழைத்து எச்சரித்து அனுப்பினர். ஆனாலும், அவர் திருந்தாமல் தொடர்ந்து லதாவிடம் தகராறு செய்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த 6-ந் தேதி இரவு வழக்கம்போல் மது குடித்து விட்டு வந்த ஹரிதாஸ், மனைவியை தகாத வார்த்தையால் பேசி தாக்கினார். இதில் ஆத்திரமடைந்த லதா சமையலுக்காக அடுப்பில் வைத்திருந்த வெந்நீரை திடீரென எடுத்து அவர் மீது ஊற்றியுள்ளார். இதில் ஹரிதாசின் முகம் மற்றும் உடலின் பல பகுதிகளில் பட்டு வலி தாக்க முடியாமல் அலறினார். உடனே சத்தம் கேட்டு அருகில் உள்ள உறவினர்கள் ஓடி வந்து ஹரிதாசை மீட்டு சிகிச்சைக்காக தக்கலை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக அவரை ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக தக்கலை போலீசார் விசாரணை நடத்தி மனைவி லதா மீது கொடுங்காயம் ஏற்படுத்தியதாக வழக்கு பதிவு செய்தனர்.
இந்த நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த ஹரிதாஸ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து போலீசார் லதாவை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுபோதையில் சித்ரவதை செய்த ஆத்திரத்தில் வெந்நீரை ஊற்றியதால் கணவர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.