கோவையில் செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த போதை ஆசாமியால் பரபரப்பு
|கோவையில் செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த போதை ஆசாமியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கோவை,
கோவை மாவட்டம் காந்திபுரம் அடுத்த காமாட்சிபுரம் பகுதியில் இருக்கக்கூடிய செல்போன் டவர் மீது நபர் ஒருவர் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக நின்று கொண்டு தற்கொலை செய்து கொள்வதாக பொதுமக்கள் மத்தியில் மிரட்டல் விடுத்ததால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் போலீசாரும் தீயணைப்புத் துறையினரும் அந்த நபரை கீழே இறக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில் அந்த நபர் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பிரபாகர் என்பதும் இங்கு கூலி வேலை செய்து வந்ததும் தெரியவந்துள்ளது.
மேலும் அவர் மதுபோதையில் டவர் மேல் ஏறி அங்குள்ள சின்ன சின்ன கம்பிகளை பிடுங்கி அங்கிருந்த பொதுமக்கள் மீது வீசி விளையாடி வந்தது தெரிய வந்துள்ளது. பலமுறை அவரை கீழே இறங்க சொல்லியும் அவர் இறங்காததால் தற்போது தீயணைப்புத் துறையினர் லாவகமாக அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி மெதுவாக மேலே ஏறிச் சென்று அவரை கீழே கொண்டு வருவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.