< Back
மாநில செய்திகள்
அரசு பஸ்சில் குடிபோதையில் தகராறு: கண்டக்டரை தாக்கி ரூ.25 ஆயிரம், செல்போன் பறிப்பு
சென்னை
மாநில செய்திகள்

அரசு பஸ்சில் குடிபோதையில் தகராறு: கண்டக்டரை தாக்கி ரூ.25 ஆயிரம், செல்போன் பறிப்பு

தினத்தந்தி
|
31 Jan 2023 2:41 PM IST

அரசு பஸ்சில் குடிபோதையில் தகராறு செய்ததுடன் கண்டக்டரை தாக்கி ரூ.25 ஆயிரம் மற்றும் செல்போனை பறித்து சென்ற 3 வாலிபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

புதுச்சேரியில் இருந்து சென்னைக்கு கிழக்கு கடற்கரை சாலை வழியாக தமிழ்நாடு அரசு விரைவு பஸ் ஒன்று மரக்காணம் தாண்டி கல்பாக்கம் நோக்கி வந்து கொண்டிருந்தது. இப்பஸ்சில் இருக்கைகள் அனைத்தும் நிரம்பி இருந்ததால், சிலர் நின்று கொண்டே பயணித்தனர். அப்போது புதுவை ஆரோவில் பகுதியில் மது அருந்திவிட்டு பஸ்சில் ஏறி பயணித்த 3 வாலிபர்கள் படியில் உட்கார்ந்து கொண்டு பயணித்தனர்.

அவர்களிடம் பஸ் கண்டக்டர் கருணாகரன் (வயது 31), படியில் உட்காராதீர்கள், எழுந்திருங்கள் என்று கண்டித்தார். அதற்கு மறுத்த அவர்கள், கண்டக்டரை மிரட்டினர்.

ஒரு கட்டத்தில் கண்டக்டருக்கும் 3 போதை வாலிபர்களுக்கு இடையே ஏற்பட்ட கடும் வாக்குவாதம் முற்றியது. பிறகு பஸ் கல்பாக்கம் நிறுத்தத்தில் நின்று பயணிகளை இறக்கியபோது 3 வாலிபர்களும் கீழே இறங்கி கருணாகரனை வலுக்கட்டாயமாக இழுத்து வந்து சரமாரியாக தாக்கினர். அப்போது கீழே கிடந்த கட்டையால் அவரது மண்டையில் தாக்கிவிட்டு, பணப்பையை பிடுங்கி கொண்டனர். பணப்பையில் இருந்த டிக்கட் வசூல் தொகை ரூ.25 ஆயிரம், செல்போன் ஆகியவற்றை பறித்துகொண்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

இதில் காயமடைந்த அவர் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். இதுகுறித்து கல்பாக்கம் போலீசார் வழக்குபதிவு செய்து தப்பி ஓடிய 3 போதை ஆசாமிகளையும் வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்