செங்கல்பட்டு
அரசு பஸ்சில் குடிபோதையில் தகராறு; கண்டக்டரை தாக்கி ரூ.25 ஆயிரம், செல்போன் பறிப்பு; 3 வாலிபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
|புதுச்சேரியிலிருந்து சென்னை நோக்கி சென்ற தமிழ்நாடு அரசு பஸ் கண்டக்டரை கட்டையால் தாக்கிவிட்டு ரூ.25 ஆயிரம் மற்றும் செல்போனை பறித்து விட்டு தப்பி ஓடிய 3 வாலிபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
கண்டருக்கு மிரட்டல்
புதுச்சேரியில் இருந்து சென்னைக்கு கிழக்கு கடற்கரை சாலை வழியாக தமிழ்நாடு அரசு விரைவு பஸ் ஒன்று மரக்காணம் தாண்டி கல்பாக்கம் நோக்கி வந்து கொண்டிருந்தது. இப்பஸ்சில் இருக்கைகள் அனைத்தும் நிரம்பி இருந்ததால், சிலர் நின்று கொண்டே பயணித்தனர். அப்போது புதுவை ஆரோவில் பகுதியில் மது அருந்திவிட்டு பஸ்சில் ஏறி பயணித்த 3 வாலிபர்கள் படியில் உட்கார்ந்து கொண்டு பயணித்தனர்.
அப்போது அவர்கள் அருகில் வந்த பஸ் கண்டக்டர் கருணாகரன் (வயது 31) என்பவர், அவர்களிடம் படியில் உட்காராதீர்கள், விழுந்துவிடப்போகீறீர்கள், எழுந்துதிருங்கள் என்று கண்டித்துள்ளார். அப்போது எங்களால் நின்று பயணம் செய்ய முடியாது. உன்னால் என்ன செய்ய முடியுமோ செய்து கொள் என்று கண்டக்டரை மிரட்டியுள்ளனர்.
பணம் பறிப்பு
அப்போது ஒரு கட்டத்தில் கண்டக்டருக்கும் 3 போதை வாலிபர்களுக்கு இடையே ஏற்பட்ட கடும் வாக்குவாதம் முற்றியது. பிறகு பஸ் கல்பாக்கம் நிறுத்தத்தில் நின்று பயணிகளை இறக்கியபோது 3 வாலிபர்களும் கீழே இறங்கி கருணாகரனை வலுக்கட்டாயமாக இழுத்து வந்து சரமாரியாக தாக்கினர். அப்போது கீழே கிடந்த கட்டை ஒன்றை எடுத்து அவரது மண்டையில் ஓங்கி தாக்கிவிட்டு, பணப்பையை பிடுங்கி கொண்டனர். பணப்பையில் இருந்த டிக்கட் வசூல் தொகை 25 ஆயிரம், செல்போன் ஆகியவற்றை பறித்துகொண்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.
பின்னர், தலையில் ரத்தம், சொட்ட, சொட்ட கல்பாக்கம் போலீஸ் நிலையம் சென்ற கண்டக்டர் கருணாகரன் தன்னை தாக்கி விட்டு, ரூ.25 ஆயிரம் பணம், தனது செல்போன் ஆகியவற்றை பறித்து சென்ற போதை ஆசாமிகள் 3 பேர் மீது புகார் செய்தார்.
ஆஸ்பத்திரியில் சிகிச்சை
அதைத்தொடர்ந்து, காயமடைந்த அவர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டார். கண்டக்டர் தாக்கப்பட்டதால் பஸ் கல்பாக்கம் இ.சி.ஆர். சாலையில் பயணிகளை இறக்கிவிட்டு, கல்பாக்கம் பணிமனைக்கு எடுத்து செல்லப்பட்டது. அப்பஸ்சில் வந்த பயணிகள் மாற்று பஸ் மூலம் கிழக்கு கடற்கரை சாலை வழியாக சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதுகுறித்து கல்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீசார் வழக்குபதிவு செய்து தப்பி ஓடிய 3 போதை ஆசாமிகளையும் வலைவீசி தேடி வருகின்றனர். மேலும், கல்பாக்கம் பஸ் நிறுத்தம் அருகில் உள்ள கண்காணிப்பு கேமராவில் போதை ஆசாமிகளின் உருவம் பதிவாகி உள்ளதா? என சோதனை செய்து அவர்களை தேடி வருகின்றனர்.